ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்... இந்த 5 ரயில்வே தடங்களைப் பாருங்க.. கண்டிப்பா இப்போ டூர் போகத்தோணும்..!
உலகில் இயற்கை அழகை ரசிக்க வைக்கும் 5 முக்கிய ரயில்வே தடங்கள் என்னென்ன? அவை எங்கு உள்ளன?
சிறுவயதில் பலருக்கும் ரயில் பயணம் என்றால் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கும். இந்தப் பயணத்தை அவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் வயது அதிகமாக அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விடும். அப்படி இருக்கும் சூழலில் மீண்டும் உங்களுக்குள் உள்ள சிறு வயது ரயில் பயண ஆசையை தோண்டி எடுக்கும் வகையில் உலகில் சில ரம்மியமான ரயில் தடங்கள் அமைந்துள்ளன. அவற்றை பார்த்தால் உங்களுக்கு ரயில் பயணம் எவ்வளவு சிறப்பானது என்பதை மீண்டும் உணர்த்தும்.
அப்படி இயற்கை அழகை ரசிக்க வைக்கும் ரயில்வே தடங்கள் எங்கு உள்ளன? அவை எப்படி இருக்கும்?
1. கிளேசியர் எக்ஸ்பிரஸ்:
சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள பனிப்பாறைகளுக்கு நடுவே இது செல்வதால் இதற்கு பெயர் கிளேசியர் எக்ஸ்பிரஸ் என்று வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியாவில் பனிப்பொழிவு ஏற்படும் நேரத்தில் இந்த ரயில் தடத்தில் பயணம் செய்தால் நம் கண் முன்னே சொர்க்கம் வந்துசெல்லும் வகையில் ஒரு உணர்வு வரும். அவ்வளவு சிறப்பான வழி தடம் இது.
2. டிரான்ஸ்-ஹார்ஸ்:
ஜெர்மனி நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையே 60 கிலோ மீட்டர் வரை இந்த ரயில் தடம் அமைந்துள்ளது. இது காடு, மலைகள் ஆகியவற்றிற்கு நடுவே செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பழைய காலத்து ரயில் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் நம்மால் மிகவும் மறக்க முடியாத அனுபவத்தை தரும் ரயில்வே தடமாக அமைந்துள்ளது.
3. பெர்ஜென் ரயில்வே:
நார்வே நாட்டின் ஆஸ்லோ மற்றும் பெர்ஜென் பகுதிகளை இணைக்கும் ரயில்வே தடம் இது. இந்த தளத்தில் மொத்தமாக பயணம் செய்ய சுமார் 7 மணிநேரம் ஆகும். அந்த 7 மணிநேரமும் நீங்கள் கொஞ்சம் கூட களைப்படையாமல் இருக்கும் வகையில் இந்த வழி தடம் அமைந்திருக்கும். நார்வேயில் அமைந்துள்ள இயற்கையான சூழல் மற்றும் மலைகளுக்கு நடுவே இப்பாதையில் ரயில்கள் செல்லும்.
4. ரோவாஸ் ரயில்வே:
தென்னாப்பிரிக்காவில் 1989-ஆம் ஆண்டு முதல் இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தடம் தென்னாப்பிரிக்காவில் உள்ள முக்கியமான சுற்றுலா இடங்களை இணைக்கிறது. அத்துடன் இந்த ரயிலும் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும். உலகிலேயே பணக்காரர்கள் அதிக பயணம் செய்யும் ரயில்கள் இதுவும் ஒன்று. அந்த அளவிற்கு இதில் வசதிகள் அமைந்திருக்கும்.
5. கொங்கன் ரயில்வே:
இந்தியாவின் கோவாவிலிருந்து கர்நாடகா வரை அமைந்துள்ள சிறப்பான ரயில்வே தடம் இது. மொத்தம் 738 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது. இத்தடத்தில் ரயில்கள் இயற்கை எழில் சூழ ஒரு சிறப்பான பயண அனுபவத்தை நமக்கு தரும். மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவற்றிற்கு இடையே பயணம் செய்யும்போது நமக்கு ஒரு நல்ல இன்பத்தை இந்த பயணம் தருகிறது. இந்த மொத்த ரயில்வே திட்டமும் 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்தியாவிலேயே பல தடங்கள் இயற்கை அழகு மாறாமல் உள்ளன. அந்த லிஸ்ட்டை அடுத்தடுத்த நாட்களில் பாக்கலாம்.
மேலும் படிக்க:நாய் வரைந்த ஓவியம்: 1.8 லட்சம் ‛லைக்ஸ்’ பெற்றது!