Titanic Letter: யப்பா.. ஒரு லெட்டர் மூன்றரை கோடிக்கு ஏலமா.? அப்படி அதுல என்ன இருக்குன்னு தெரியுமா.?
இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், ஒரு கடிதம் சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. அந்த கடிதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா.?

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட கடிதம் ஒன்று, இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில், சுமார் மூன்றரை கோடி ருபாய்க்கு ஏலம் போயுள்ளது. அப்படி அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது.? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உலகப் புகழ்பெற்ற பிரமாண்ட டைட்டானிக் சொகுசுக் கப்பல்
உலக அளவில் புகழ்பெற்ற பிரமாண்ட கப்பலான டைட்டானிக் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. இந்த தலைமுறையினரும் அந்த கப்பல் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு, டைட்டானிக் திரைப்படம் வாயிலாக கிடைத்தது. அந்த காலகட்டத்தில் உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பல் இதுதான்.
இந்த பிரமாண்ட சொகுசு கடல் ராணி, 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இங்கிலாந்தின் சவுதாம்ப்டனிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. ஆனால், துரதிஷ்டவசமாக, தனது முதல் பயணத்தின்போதே, கடலில் இருந்த அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இந்த கோர விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உலகையே துயரத்தில் ஆழ்த்திய இந்த விபத்து, டைட்டானிக் என்ற பெயரிலேயே ஹாலிவுட் திரைப்படமாக வந்தது.
அப்படிப்பட்ட அந்த கப்பலில் இருந்து கிடைத்த பொருட்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில், ஒரு கடிதம் சுமார் மூன்றரை கோடி ருபாய்க்கு ஏலம் போயுள்ளது.
மூன்றரை கோடியை அள்ளிய கடிதம் யாருடையது.?
இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில், டைட்டானிக் விபத்தில் உயிர் தப்பியவர்களின் முக்கிமானவரான கர்னல் ஆர்சிபால்ட் கிரேஸி எழுதிய கடிதம்தான் சுமார் மூன்றரை கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. அவர் கப்பலில் ஏறிய அதே நாளில் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கப்பல் நன்றாகத்தான் உள்ளது, ஆனால் இவள்(கப்பல்) குறித்தான முழு தீர்ப்பை தெரிவிக்க, பயணத்தின் இறுதி வரை காத்திருப்பேன் என கூறியுள்ளார். அந்த கடிதத்தை அவர் எழுதும்போது, அது பனிப்பாறையில் மோதி மூழ்கும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
இதனால்தான், இந்த கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது. அதன் காரணமாகவே, சுமார் மூன்றரை கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, இந்த கடிதம் சாதனை படைத்துள்ளது.





















