சினம் கொண்ட சிங்கத்தையும் ஸ்வீட்டாக மாற்றும் லவ் ஹார்மோன்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சிங்கம் என்றாலே அதன் கர்ஜனையும், கம்பீரமும் தான் நினைவுக்கு வரும் நமக்கு. ஆனால் ஒரு சில துளி லவ் ஹார்மோனை மூக்கில் தெளித்தால் போது சிங்க ராஜா ரோமியோ போல் ஸ்வீட்டாகிவிடுவார் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சிங்கம் என்றாலே அதன் கர்ஜனையும், கம்பீரமும் தான் நினைவுக்கு வரும் நமக்கு. ஆனால் ஒரு சில துளி லவ் ஹார்மோனை மூக்கில் தெளித்தால் போது சிங்க ராஜா ரோமியோ போல் ஸ்வீட்டாகிவிடுவார் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆம் தென் ஆப்ரிக்காவின் வனவிலங்குப் பூங்காவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் தான் இந்த விந்தையைக் கண்டுபிடித்துள்ளனர்.
பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கம் கானகத்தின் ராஜா என அறியப்படும் விலங்கும். ஆனால் இந்த விலங்கின் நாசியில் ஆக்ஸ்டாசின் (Oxytocin) என்ற லவ் ஹார்மோனை தெளித்தால் அது மனிதர்களுடனேயே கூட அன்பாகப் பழகுமாம். மேலும், பூங்காவிற்கு வரும் அந்நியர்களையும் கூட கர்ஜனை செய்து அச்சுறுத்தாமல் கடந்து போகுமாம்.
ஆக்ஸிடாசின் என்றால் என்ன?
ஆக்ஸிடாசின் (Oxytocin) என்பது மூளையில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன். இது இனப்பெருக்க நிகழ்வுகளைக் கண்காணிக்கிறது. பொதுவாக பாலூட்டிகள் அனைத்தின் சமூக பண்பை நிர்ணயிக்கிறது.
இந்நிலையில் தான் நரம்பியல் விஞ்ஞானியான சாரா ஹெய்ல்ப்ரோனர் மற்றும் உயிரியல் ஆராய்ச்சியாளர் க்ரெய்க் பேக்கரும் இணைந்து ஓர் ஆய்வை முன்னெடுத்தனர். அதாவது கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் அவர்கள் இந்த ஆய்வைச் செய்தனர். அப்போது அவர்கள் இறைச்சியைக் காட்டி வேலிக்கு அருகே சிங்கங்களை வரவழைத்து அவற்றின் மூக்கில் ஆக்ஸிடாசின் ஹார்மோன் ஸ்ப்ரேயை தெளித்தனர்.
இதை பல்வேறு சிங்கங்களிடமும் சோதித்தனர். ஒரே குழுவில் இருக்கும் சிங்கங்கள். வெவ்வேறு குழுக்களில் உள்ள சிங்கங்கள். ஆப்பிரிக்காவில் விலங்கியல் பூங்காக்களில் உள்ள சிங்கங்கள் எனப் பலவற்றிலும் சோதித்தனர். அவ்வாறு சோதித்த போது பல சிங்கங்கள் எதிர்பார்த்தது போலவே தங்களின் தன்மையில் மென்மையைக் காட்டியுள்ளன. இந்த ஆக்ஸிடாசின் ஸ்ப்ரேயை மூக்கின் அருகே தெளிக்கும் போது அது ட்ரைஜெமினல் நரம்பு, ஆல்ஃபேக்டரி நரம்பு வழியாக நேரடியாக மூளைக்குச் சென்று வேலையைத் தொடங்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த மருந்தை மொத்தம் 23 சிங்கங்களில் செலுத்தி சோதித்த விஞ்ஞானிகள் கண்ட மாற்றங்கள் அவர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. சில சிங்கங்கள், தனது எல்லைக்குள் வந்த மற்ற சிங்கங்களை கண்டு கொள்ளவில்லை. பொதுவாக தனது எல்லைக்குள் வேறு சிங்கமோ சிங்கக் கூட்டமோ வந்தால் அவை பொறுத்துக் கொள்ளாமல் எல்லைச் சண்டையில் இறங்கிவிடும். ஆனால் இந்த முறை அப்படியில்லாமல் சிங்கங்கள் அமைதியாக இருந்துள்ளன. சில் அவுட் மோடில் சிங்கங்கள் இருந்ததாக ஆராய்ச்சிகள் தங்கள் குறிப்பில் எழுதி வைத்துள்ளனர்.
மேலும் சிங்கங்களுக்குப் பிடித்த பூசணி பொம்மையை விளையாடக் கொடுத்தும் பரிசோதித்துள்ளனர். வழக்கமாக இதைக் கொடுக்கும் போது சிங்கங்கள் தங்களுக்குள் குறைந்தது 7 மீட்டராவது இடைவெளி இருப்பதை உறுதி செய்து விளையாடும். ஆனால் இந்த முறை சிங்கங்கள் வெறும் 3.5 மீட்டர் இடைவெளியில் விளையாடத் தொடங்கின. அதே போல் மற்ற சிங்கங்களைப் பார்த்து பயங்கரமாக கர்ஜனை செய்வதையும் குறைத்திருந்தன.
இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன், ஆப்பிரிக்காவில் உள்ள சஃபாரி பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களில் அதிகம் பயன்படுவதாக நல்ல பலனைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.