உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!
மனிதர்களை விட விலங்குகள் நன்றி விசுவாசத்திலும், பாசத்திலும் பல மடங்கு உயர்ந்தவை என்பதை அடிக்கடி பல தருணங்களில் உணர்த்தி உள்ளது. தற்போது துருக்கி நாட்டில் நடைபெற்ற சம்பவம் மனிதர்களை விட விலங்குகளுக்கே பாசம் அதிகம் என்று உணர்த்தியுள்ளது.
துருக்கி நாட்டில் உள்ளது இஸ்தான்புல். அந்த நகரில் வசிப்பவர் சிமல் சென்டர்க் என்ற 68 வயது முதியவர். இவர் ரெட்ரீவர் என்ற வகையைச் சேர்ந்த நாயை தனது செல்லப்பிராணியாக வீட்டிலே வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் சிமல் சென்டர்கிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தனது எஜமானரை ஆம்புலன்சில் ஏற்றிச்செல்வதை பார்த்து பதறிப்போன அந்த நாய், ஆம்புலன்ஸ் பின்னாலேயே பல கி.மீ. வரை ஓடிச்சென்றுள்ளது. அங்கு அவரது எஜமானரை ஆம்புலன்சில் இருந்து இறக்கி, மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் செல்வதைப் பார்த்த அந்த நாய் தானும் மருத்துவமனைக்குள் நுழைய முயற்சி செய்துள்ளது.
ஆனால், அந்த நாயை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிமல் சென்டரை காண்பதற்காக மருத்துவமனை வாசலிலே காத்திருந்தது. ஊழியர்கள் எவ்வளவு விரட்டினாலும் அந்த நாய் தினமும் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தது. இதையடுத்து, 6 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். அவரை கண்டதும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த அவரை இந்த நாய் பாசத்துடன் சுற்றிவந்தது.
சிமல் சென்டர்கின் மகள் அந்த நாயை, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒருமுறை முயற்சித்துள்ளார். ஆனாலும், அந்த நாய் மருத்துவமனையை விட்டு நகர மறுத்துள்ளது. தனது எஜமானருக்காக இந்த நாய் ஆம்புலன்ஸ் பின்னாலே பல கி.மீ. தூரம் ஓடிவரும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நாயின் அன்பையும், விசுவாசத்தையும் கண்டு பலரும் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.