Donald Trump: மிரட்டிவிட்ட கருவூலச் செயலாளர்.. மெர்சலான ட்ரம்ப்.. முடியும் வரிப் போர்.?
சீனாவிற்கான வரி கனிசமாக குறையும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அவரது இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா.?

அமெரிக்கா - சீனா இடையே வரிப் போர் முற்றியிருந்த நிலையில், சீனாவுக்கான வரி கனிசமாகக் குறையும் என ட்ரம்ப் தற்போது கூறியிருக்கிறார். எதனால் அவருக்குள் இப்படி ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது தெரியுமா.? பார்க்கலாம் வாருங்கள்...
படிப்படியாக உயர்ந்து உச்சத்தை தொட்ட அமெரிக்கா-சீனா வரிப் போர்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்த நிலையில், சீனாவிற்கு 34 சதவீத வரியை விதித்தார். அதற்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கு 34% வரியை விதித்தது சீனா. இதைத் தொடர்ந்து, சீனாவிற்கான வரியை 104%-ஆக உயர்த்தினார் ட்ரம்ப். அதற்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கான வரியை 84%-ஆக உயர்த்தியது சீனா. இதைத் தொடர்ந்து, சீனவிற்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தினார் ட்ரம்ப்.
இதற்கும் பதில் வரி விதிப்போம் என சீனா எச்சரித்த நிலையில், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிரடியாக 145 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சீன விமான நிறுவனங்கள் விமானங்களை வாங்கக் கூடாது எனவும், விமானம் தொடர்பான கருவிகளையும் வாங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது அந்நாட்டு அரசு.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் 100 சதவீதம், அதாவது 245 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இது சீனாவிற்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.
மிரட்டிவிட்ட அமெரிக்க கருவூலச் செயலாளர்.. இறங்கி வந்த ட்ரம்ப்
சீனா உடனான வர்த்தகப் போரால் அமெரிக்க சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வரிப் போர் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இப்படியே போனால் தாக்குப்பிடிக்க முடியாது என்றும், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் ட்ரம்பிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் மெர்சலான ட்ரம்ப், வரி விஷயத்தில் சற்று இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நேற்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், சீனாவிற்கான வரி கனிசமாகக் குறையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பேரம் பேசுவது குறித்தும் அவர் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதையும் வெளிக்காட்டியுள்ளார். சீனாவிற்கான வரி 145% என்ற அதிக அளவில் தொராது, அது கனிசமாக குறையும், ஆனால் பூஜ்ஜியமாக இருக்காது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆனாலும், சீனா ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும், அப்படி செய்யாவிட்டால், அமெரிக்காவுடன் அவர்களால் வர்த்தகம் செய்ய முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை..?
இதனிடையே, 100-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதில் சீனா இல்லையென்றும், ஆனால் எதிர்வரும் நாட்களில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ, இரு நாடுகளுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, உலக அளவில் பங்குச் சந்தைகள் சரிவிலிருந்து மீண்டு, வர்த்தகம் சீரானால் போதும் என்பதே, தற்போது அனைத்து நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















