ரூ.37 கோடி பரிசு! முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம்
தமிழக அரசு நடத்தும் ரூபாய் 37 கோடி மதிப்பிலான முதலமைச்சர் விளையாட்டு கோப்பைக்கான போட்டியில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டின் ஊரக விளைாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் உதயநிதி ஸ்டாலின். அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதலே தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்:
“ தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை திறமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்கள் சர்வதேச அரங்கில் சாதிக்க முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் களம் அமைத்துக் கொடுத்து வருகின்றன.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024ல் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவை sdat.tn.gov.in இணையதளத்தில் இன்று(நேற்று) தொடங்கி வைத்தோம். நம் திராவிட மாடல் அரசு நடத்தும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் என நடைபெறும். இந்த போட்டிகளுக்கு ரூபாய் 37 கோடி அளவிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்வது எப்படி?
இந்த போட்டிகளில் பங்கேற்க கடைசி நாள் வரும் 25ம் தேதி ஆகும். இதில் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், ஓட்டப்போட்டி, கூடைப்பந்து, நீச்சல், பேட்மிண்டன் என மொத்தமாக 53 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட/ மண்டல/ மாநில அளவில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. மேலும், இதுதொடர்பாக மேலும் தகவல் தெரிந்து கொள்ள 9514000777 என்ற எண்ணை அழைக்கலாம்.