Ranil Wickremesinghe: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை முற்றுகையிட முயன்ற தமிழ் மக்கள்..தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைப்பு
இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங்கேவை தமிழ் மக்கள் முற்றுகையிட முயன்றதால் பொங்கல் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் கொண்டாட்டம்:
தேசிய தைப்பொங்கல் விழாவையொட்டி, யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார். அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக யாழ்ப்பாணம் சென்ற அவர், தமிழ் கலாச்சார முறைப்படி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, இந்து சமய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
மக்கள் முற்றுகையிட முயற்சி:
இதனிடையே தங்கள் பகுதிக்கு அதிபர் வந்து இருப்பதை அறிந்து, பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தமிழர்கள் அங்கு குவிந்தனர். போரின் போது காணாமல் போனவர்களை மீட்டு தருவது, ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நிலங்களை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அதிபரிடம் வலியுறுத்த, பொங்கல் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் நுழைய முயன்றவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
தள்ளு-முள்ளு
அதிபரை சந்திக்க தங்களை அனுமதியுங்கள் என, அங்கு பெண்கள் கதறி அழுதனர். ஆனாலும், பாதுகாப்பு படையினர் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்காததால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நிலவிய சூழலை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டம் கலைக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
போரில் காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு:
இதனிடையே பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, ”போரின் போது காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் பேசியுள்ளோம். என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும். அதே போன்று உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்க வேண்டும். உண்மையை கண்டறிவதை ராணுவமும் விரும்புகிறது. அதன் மூலம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளும் நீங்கும் என ராணுவம் தெரிவித்துள்ளது”.
நிலங்களை ஒப்படைக்க நடவடிக்கை:
தொடர்ந்து. ”ராணுவத்தால் ஆக்கிரமிப்பட்டதாக கூறப்படும் நிலம் தொடர்பாக ஆராய இருக்கிறோம். அத்தோடு யாழ்ப்பாணத்தில் நிலங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆராயப்படும். போர்க் காலத்தில் இந்தப் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ராணுவத்தினர் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். தற்பொழுது 3000 ஏக்கர் தான் தான் எஞ்சியுள்ளது. அதிலும் மற்றொரு பகுதியை உரிமையாளர்களிடம் வழங்க ராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது. அது குறித்தும் ஆராயப்படும்” என அதிபர் ரணில் விக்ரம்சிங்கே உறுதியளித்துள்ளார்.