Srilanka War Crime: ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கண்டனம்.. தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கோரியது இந்தியா!
ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இறுதி அறிக்கை குறித்து இன்று விவாதம் நடைபெற்றது.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து 2021 மார்ச் 23-ஆம் தேதி ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இறுதி அறிக்கை இன்று (செப்டம்பர் 12) ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51-ஆம் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்றது.
ஐநா மனித உரிமைகள் ஆணையர் கண்டனம்
கொடும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டாத நிலைமை, பொறுப்புக்கூறல் இல்லாமை தான் இலங்கையின் இன்றைய மோசமான நிலைமைக்கு காரணம் என கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை, போர் முடிந்து 13 ஆண்டுகள் ஆன பின்னரும் நீதி கிடைக்காத நிலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பன்னாட்டளவிலான நீதி விசாரணை முறைகளை உலக நாடுகள் முன்னெடுக்க கோரியுள்ளது. அத்தகையை விசாரணைகள் மூலம் இலங்கையில் கொடும்குற்றங்களை இழைத்தவர்களை தண்டிக்கும் நோக்கில் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் மூலம் ஆதரங்களை திரட்டும் விசாரணை அமைப்புக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் கோரியுள்ளது.
India's statement at the Interactive Dialogue on the report of OHCHR on promoting reconciliation, accountability, and human rights in Sri Lanka at the 51st session of the Human Rights Council. @MEAIndia @SecySanjay @IndiainSL pic.twitter.com/hFt80EB8GM
— India at UN, Geneva (@IndiaUNGeneva) September 12, 2022
இலங்கை வெளியுறவு அமைச்சர் எதிர்ப்பு
ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைக்கு, இலங்கையின் புதிய ரனில் விக்கிரமசிங்கே அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஐநா மனித உரிமைகள் பேரவை கைவிட வேண்டும் என இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேசியுள்ளார்.
ஐநாவுக்கான இந்திய தூதர் கருத்து
இலங்கையில் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசியல் தீர்வு காண்பதில் முன்னேற்றம் இல்லை என ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. அதிகாரப்பரவலாக்கம் வேண்டும். மாகாணங்களுக்கு தேர்தல் வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. (ஆனால், இலங்கையில் இழைக்கப்பட்ட கொடும் குற்றங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை)
இன்று (செப்டம்பர் 12) தொடங்கியுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்ட தொடரில், இலங்கை மீதான புதிய தீர்மானம் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளது.