இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வந்த அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 2 மணி நிலவரப்படி, நுவரெலியா 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. மொனராகலையில் 65 சதவிகித வாக்குகளும் மாத்தறையில் 62 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. ரத்னபுராவில் 60 சதவிகித வாக்குகளும் கொழும்புவில் 60 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இலங்கையில் அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து, இன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இலங்கையின் அடுத்த அதிபர் யார்?
இதனால், நாளை காலையோ அல்லது மாலைக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் தேர்தலில் 39 பேர் போட்டியிட்டனர். அதில் ஒருவர் காலமாகிவிட்டார். களத்தில் 38 பேர் இருந்தாலும், மூன்று பேருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.
தற்போதைய அதிபரான ரணில் விக்கிரமசிங்க, சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதாரத்தை சரியான பாதையில் அழைத்து சென்று வருவதாகவும், நிலையான ஆட்சியை தருவதாக கூறி தேர்தலை சந்தித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
இரண்டாவது பெரும் போட்டியாளர் என்றால் அது சஜித் பிரேமதாச. எஸ்.ஜே.பி ( Samagi Jana Balawagaya) கட்சியின் சார்பில் களமிறங்கியுள்ளார். பொருளாதார பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவதாகவும் நல்ல மாற்றத்தை தருவதாகக் கூறி தேர்தலை சந்தித்துள்ளார் சஜித் பிரேமதாச.
3-வது பெரும் வேட்பாளர் என்றால் அது ஜே.வி.பி ( Janatha Vimukthi Peramuna) கட்சியின் சார்பில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள அனுர குமாரா திசநாயக ஆவார்.
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் மீது அம்மக்கள் கோபத்தில் இருப்பதால், அவரது மகன் நமல் வேட்பாளராக களமிறங்கினாலும் சாதகமான சூழ்நிலை இல்லாத நிலை நிலவுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
இலங்கை பூர்விக தமிழர்கள், மலையகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்கள் என இலங்கை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 25 சதவீதம் இருப்பார்கள். எனவே, இவர்கள் வாக்குகள் சிதறுவது, ஜே.வி.பி-யின் அனுர குமாரா திஸநாயகவுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பெல்லாம், தமிழர்களின் வாக்குகள் குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு பெரும்பான்மையாகச் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. அது இம்முறை இருக்குமா என்பது தெளிவற்று இருக்கிறது என்பதே கள நிலவரம்.