London Protest: லண்டனில் எதிரொலித்த மணிப்பூர் விவகாரம்..பழங்குடி பெண்களுக்காக போராட்டத்தில் குதித்த மனித உரிமைகள் அமைப்பு
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்கள் குழு, மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய லண்டனில் அமைதி ஊர்வலத்தை ஏற்பாடு செய்தனர்.
கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்தது. கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. குறிப்பாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்கைளை ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்களையும் கொடூர கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
நாட்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்திய மணிப்பூர் சம்பவம்:
இந்த சம்பவம், நாட்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பிரிட்டன் தலைநகர் லண்டனில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்கள் குழு, மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய லண்டனில் அமைதி ஊர்வலத்தை ஏற்பாடு செய்தனர். வடகிழக்கு இந்திய பெண்களின் ஆதரவு குழு (WNESN) இந்திய தூதரகத்திற்கு வெளியே ஏற்பாடு செய்த ஊர்வலத்தில் அமைதியைக் குறிக்கும் வகையில் முகமூடி அணிந்த ஆண்களும் பெண்களும் பதாகைகளை ஏந்தி கலந்து ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம், நாடாளுமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகே எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அந்தக் குழுவினர் நாடாளுமன்ற சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
லண்டனில் அமைதி போராட்டம்:
இதுகுறித்து WNESN அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மணிப்பூரின் குக்கி-ஸோ சகோதரிகள் வலியையும் வேதனையையும் பகிர்ந்து கொள்வதற்காக நாங்கள் ஒற்றுமையாக ஊர்வலம் சென்றோம்" என குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா காலத்தில் பெண்கள் உதவி செய்யும் வகையில் இந்த குழு தொடங்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தால், கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கி போயுள்ளது.
நாடாளுமன்றத்தில் 7ஆவது நாளாக இன்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள், மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் பழங்குடி பெண்கள் தொடர்பான விசாரணை, சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. இது தொடர்பான விசாரணை, மணிப்பூர் வெளியே நடத்தப்படும் என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.