Mummy Switzerland | 2600 ஆண்டுகள் பழமையான பெண் மம்மி.. முகத்தை மீட்டு மறுவடிவம் கொடுத்த ஆய்வாளர்கள்!
சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பெண் மம்மியின் முகத்தை மீட்டுருவாக்கம் செய்து, அழகான பெண்ணாக உருவம் கொடுத்துள்ளனர் ஆய்வாளர்கள்.
சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பெண் மம்மியின் முகத்தை மீட்டுருவாக்கம் செய்து, அழகான பெண்ணாக உருவம் கொடுத்துள்ளனர் ஆய்வாளர்கள்.
ஷெப்பென்சிஸ் என்ற பெயர் கொண்ட இந்தப் பெண் மம்மியின் முகத்தை அவரது எலும்புக்கூடுகளில் இருந்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தப் பெண் மம்மி சுவிட்சர்லாந்து நாட்டில் பிரபலமான எகிப்து மம்மியாகக் கருதப்படுகிறது.
எகிப்து நாட்டின் நைல் நதியின் மேற்கு கரையோரத்தில் உள்ள கல்லறைகளில் கடந்த 1819ஆம் ஆண்டு ஷெப்பென்சிஸ் கண்டெடுக்கப்பட்டு, 1820ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டின் புனித கேலன் நகரத்தில் உள்ள சாவ் காலோ நூலகத்தின் இந்தப் பெண் மம்மி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அதன் கல்லறையின் மீது எழுதப்பட்டிருப்பவற்றின் அடிப்படையில், ஷெப்பென்சிஸ் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், கி.மு 7ஆம் நூற்றாண்டில் அவர் கல்வி பெற்றிருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், எகிப்து நாட்டின் தீப்ஸ் நகரத்தின் பூசாரின் மகளான ஷெப்பென்சிஸ் சுமார் கி.மு 610ஆம் ஆண்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும், அவரது கணவரின் பெயரோ, தொழிலோ, அவருக்குக் குழந்தைகள் இருந்தார்களா என்ற கேள்விகளுக்கான விடைகளைக் கண்டுபிடிக்க முடியாது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் மம்மியின் முகத்திற்கு மறுவடிவம் கொடுக்கும் பணியை இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஃபேபேப் ஆய்வு நிலையமும், ஆஸ்திரேலியாவின் ஃப்லிண்டர்ஸ் பல்கலைக்கழகமும், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 3D வடிவமைப்பாளரான சிசெரோ மோரேஸ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். சிசெரோ மோரேஸ் வரலாற்று நாயகர்களான மேரி மேக்டேலேன், இயேசு கிறிஸ்து ஆகியோரின் முகங்களின் மறுவடிவமைப்புப் பணிகளில் ஈடுபட்டவர். இந்த மறுவடிவமைப்புப் பணிகளைப் புனித கால் நகரத்தின் அப்பே நூலகம் நிதியுதவி வழங்கி நடத்துள்ளது. மேலும் இந்த நூலகம் கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பெண் மம்மியின் சிடி ஸ்கேன் விவரங்களைப் பாதுகாத்து வைத்துள்ளது.
`ஷெப்பெனிஸின் மண்டை ஓட்டை ஆய்வு செய்கையில் அதன் வடிவம் அவரது உயிரோடு இருந்த போது மிகவும் அழகான பெண்ணாக இருந்திருப்பார் என்பதை உணர்த்துகிறது’ என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1820ஆம் ஆண்டு ஷெப்பெனிஸ் கல்லறையில் இருந்து எடுக்கப்பட்ட போது, அவரது பற்கள் பாதுகாப்பாக இருந்ததாகக் குறிக்கப்பட்டிருந்தது. அது மறுவடிவமைப்புப் பணிகளில் பெரிதும் உதவியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வாளர்களின் குழு மண்டை ஓட்டின் மீது படிப்படியாக திசுக்கள், கண், தோல், கண்ணுக்குத் தெரியாத அளவில் சிறிய முடிகள் முதலானவற்றை சேர்த்து முகத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளனர். அவரது காது மம்மியாகி பதப்படுத்தப்பட்டதால் எளிதாக மீண்டும் மறுவடிவம் கொடுக்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷெப்பென்சிஸ் எகிப்தில் தனது குடும்பத்துடன் கல்லறையில் இருந்ததாகவும், அவர் தந்தை பாயெஸ் ஜென்ஃபீயின் மம்மி ஜெர்மனி நாட்டின் பெர்லினில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.