தன்பாலீர்ப்பாளர்களின் சுயமரியாதை மாதம்.. வானவில் நிறப் பொருள்களைப் பறிமுதல் செய்யும் சவூதி அரேபிய அரசு!
சர்வதேச அளவில் தன்பாலீர்ப்பாளர்கள் ஜூன் மாதத்தை சுயமரியாதை மாதமாகக் கொண்டாடும் சூழலில், சவூதி அரேபியாவில் அரசு அதிகாரிகள் வானவில் நிறப் பொருள்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் தன்பாலீர்ப்பாளர்கள் ஜூன் மாதத்தை சுயமரியாதை மாதமாகக் கொண்டாடும் சூழலில், சவூதி அரேபியாவில் அரசு அதிகாரிகள் வானவில் நிறம் கொண்ட பொம்மைகளையும், துணிகள், கொடிகள் முதலானவற்றையும் பறிமுதல் செய்து வருகின்றனர். வானவில் நிறத்திலான சட்டைகள், தொப்பிகள், பென்சில் பாக்ஸ்கள் முதலானவை இந்தப் பறிமுதல் நடவடிக்கையில் குறிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
`மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும், பொது விதிமுறைகளுக்கு எதிராகவும் இளம் தலைமுறையைக் குறிவைக்கும் தன்பாலீர்ப்பாளர்களின் நிறம்கொண்ட தயாரிப்புகள் மட்டுமே பறிமுதல் செய்யப்படுகின்றன’ என சவூதி அரேபியாவின் வர்த்தகத் துறையில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த நிறங்கள் குழந்தைகளுக்கு `நச்சுத்தன்மை கொண்ட செய்திகளைப்’ பரப்புவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
தன்பாலீர்ப்பாளர்களின் சுயமரியாதையின் சின்னமாக இருக்கும் வானவில் கொடி என்பது தன்பாலீர்ப்பாளர் சமூகத்தின் பன்முகத்தன்மையைக் குறிக்கிறது.
தன்பாலீர்ப்பாளர்களைக் குறிக்கும் காட்சிகள் இருந்தாலே திரைப்படங்களைத் தடை செய்யும் சவூதி அரேபியாவில் தற்போது இந்தப் பறிமுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் வெளியான டிஸ்னி நிறுவனத்தின் `டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்நெஸ்’ திரைப்படத்தில் வெறும் 12 நொடிகள் மட்டுமே வந்த காட்சி ஒன்றை நீக்கக் கூறியது சவூதி அரேபிய அரசு. எனினும், டிஸ்னி நிறுவனம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தன்பாலீர்ப்பாளர்களின் முத்தக் காட்சி இடம்பெறுவதால் சமீபத்தில் டிஸ்னி நிறுவனத்தின் `லைட் இயர்’ என்ற அனிமேஷன் திரைப்படத்தையும் தடை செய்தது சவூதி அரேபிய அரசு.
فرقنا الرقابية تنفذ جولات على منافذ البيع وتضبط وتصادر منتجات تتضمن رموز ودلالات تدعو للشذوذ وتنافي الفطرة السّوية، وتوقع الجزاءات النظامية على المنشآت المخالفة. pic.twitter.com/XyeNvYmOvl
— وزارة التجارة (@MCgovSA) June 14, 2022
கடந்த டிசம்பர் மாதம், சவூதி அரேபியாவின் அண்டை நாடான கத்தாரில் வானவில் கொடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மீறல் விவகாரத்தில் தொடர்ந்து சவூதி அரேபியா அரசு குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ஜூன் மாதத்தை `சுயமரியாதை மாதம்’ எனத் தன்பாலீர்ப்பாளர்கள் கொண்டாடுவதும், அதன் மூலமாக தன்பாலீர்ப்பாளர் சமூகம் மீதான பாகுபாட்டைத் தடுக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்