Russia Nuclear Drill: ரஷ்யா-உக்ரைன் போர்; எகிறும் பதற்றம்; புதின் மேற்பார்வையில் நடந்த அணு ஆயுதப் படைகளின் ஒத்திகை
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்துவரும் நிலையில், தற்போது அணு ஆயுதப் படைகளின் ஒத்திகையை புதின் பார்வையிட்டுள்ளது, பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இத்தகைய சூழலில், ரஷ்யா அணு ஆயுத ஒத்திகையில் ஈடுபட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
பலிக்காத ட்ரம்ப்பின் முயற்சிகள்
3 ஆண்டகளுக்கும் மேலாக தொடரும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால், இதுவரை அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த 15-ம் தேதி, அலாஸ்காவில் ரஷ்ய அதிப புதினை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்பால், அவரை சமாதானப்படுத்த முடியவில்லை. இந்த போச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால், அதைத் தொடர்ந்து ஹங்கேரியில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொண்டு, புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.
அந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த போர் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான், உக்ரைன் உடன் நடந்துவரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், ரஷ்யாவிற்கு உடன்பாடு இல்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜியோ லாவ்ரோவ் உறுதிபட தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினின் சந்திப்பு ஒத்திவைக்கப்படுவதாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளது. புதினை சந்திப்பது நேர விரயம்தான் என ட்ரம்ப் விமர்சித்த நிலையில் தான், அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதப் படைகளின் ஒத்திகையை பார்வையிட்ட புதின்
ரஷ்ய அதிபர் புதின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தியில் உள்ள நிலையில், அதை மேலும் அதிகரிக்கும் விதமாக ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் புதின்.
ஆம், நேற்று, அதிபர் புதினின் மேற்பார்வையில், ரஷ்ய அணு ஆயுதப் படைகளின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள பிளெசெட்ஸ்க்கில் உள்ள ஏவுதளத்திலிருந்து, அணு ஆயுதங்களை ஏந்தி கண்டம் விட்டு கண்டம் பாயும் யார்ஸ் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல், பாரன்ட்ஸ் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சினேவா ஐசிபிஎம் ஏவுகணை சோதிக்கப்படுள்ளது.
மேலும், விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணைகள், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவற்றின் ஒத்திகையும் நடைபெற்றுள்ளது. ஆக மொத்தத்தில், நிலம், நீர், ஆகாயத்தில் பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த ஒத்திகை, அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகளை பயிற்சி செய்வதற்கான நோக்கம் கொண்டவை என ரஷ்ய ராணுவத்தின் பொதுப் பணியாளர்களின் தலைவரான ஜெனரல் வலேரி ஜெராசிமோவ், வீடியோ இணைப்பு மூலம் புடினுக்கு இந்த பயிற்சிகள் குறித்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று உக்ரைன் பகுதிகளில் ரஷ்யா நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த அணு ஆயுத ஒத்திகை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.





















