Ukraine Russia War : தீவிரமாகும் உக்ரைன் போர்: இந்தியா இத்தனை அபாயங்களை எதிர்கொள்கிறதா?
அதற்குப் பின்னர் இந்தியாவில் பெட்ரோல் விலை 115 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் நாட்டில் கடந்த 7 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆரம்பத்தில் போர் மிதமாக நடந்தபோதும் இரண்டு நாட்களாகத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றின்மீது ரஷ்யப் படைகள் மிகவும் தீவிரமாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமானப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சர்வதேச வங்கிகளுடனான பணப் பரிமாற்ற சேவைக்கு உதவும் ஸ்விஃப்ட் அமைப்பைப் பயன்படுத்தவும் ரஷ்யாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
110 டாலர்களைத் தாண்டிய விலை
ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெயின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இன்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 110 டாலர்களைத் தாண்டி விற்கப்படுகிறது. இந்த விலை கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஒரு பீப்பாய்க்கு 103.15 டாலர்களாக இருந்தது.
இந்த சூழலில், இந்தியா ரேட்டிங் நிறுவனம் சார்பில் வெளியாகி உள்ள ஆய்வறிக்கையில், தலைமை பொருளாதார நிபுணர் தேவேந்திர பண்ட் சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 5 டாலர்கள் உயரும்போது, நடக்குக் கணக்குப் பற்றாக்குறை சுமார் ரூ.50 ஆயிரம் கோடியாக உயரும். சர்வதேசப் பொருட்களின் விலை உயர்வால், உள்ளூர் பொருளாதாரமும் அடிவாங்கும்.
அந்நியச் செலாவணி விவகாரத்தால் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதாரத் தடுமாற்றங்களும் இந்தியாவில் லேசான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இலங்கையுடனான வர்த்தக உறவு அதிகபட்சமாக, 2015ஆம் ஆண்டில் 7.46 பில்லியன் டாலர்களாக இருந்தது. இப்போது மிகவும் குறைந்து 4.42 பில்லியன் டாலர்களாக உள்ளது.
அதேபோல உக்ரைன் உடனான வர்த்தக உறவும் மோசமாகச் சிதைந்துள்ளது. 2013ல் 3.11 பில்லியன் டாலராக இருந்தது 2022ஆம் நிதியாண்டில் 2.59 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.
அதிக இறக்குமதி விலை மற்றும் ரூபாய் சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால், பெட்ரோலியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர உள்ளது.
நகைகள், சமையல் எண்ணெய், உர விலை உயர்வு
இந்த விலை உயர்வால் இந்தியாவின் இறக்குமதிச் செலவு ரூ.45.44 லட்சம் கோடியாக ($ 600 billion) அதிகரிக்கும். பிற நாடுகளைச் சார்ந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், கனிம, இயற்கை எண்ணெய், நகைகள், சமையல் எண்ணெய் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயரக் கூடும். இதனால் பண வீக்கம் ஏற்படும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்படும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரியும்.
ஏற்கெனவே இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100-ஐத் தாண்டி விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த விலை இன்னும் அதிகரிக்கலாம். இதனால் சாமானிய மக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவர்''.
இவ்வாறு இந்தியா ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் நிலையில், இந்தியாவில் ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டு எண்ணெய்க் கிணறுகளில் சேமித்து வைத்திருக்கப்பட்டிருக்கும் எண்ணெயைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா 3.9 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயைச் சேமித்து வைத்துள்ளது. இதைக் கொண்டு ஒருவாரத்துக்கு சமாளிக்கலாம். அதற்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
தேர்தல்தான் காரணமா?
இந்தியாவில் தினந்தோறும் புதுப்பிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை, நீண்ட நாட்களாகத் தொடர்ந்து அதே விலையில் நீடித்து வருகிறது. இதற்குக் காரணம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என்று சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வரும் மார்ச் 8ஆம் தேதி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைய உள்ளது. அதற்குப் பின்னர் இந்தியாவில் பெட்ரோல் விலை 115 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவாசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும். சமையல் எண்ணெயின் விலையும் உயரும் நிலையில், ஓட்டல்களில் உணவுகளின் விலையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.