உக்ரைன் போரில் திருப்புமுனை...ரஷியாவுக்கு பெரும் பின்னடைவு...என்ன நடந்தது?
பிப்ரவரியில் ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு, ரஷியா கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் நகரம் ஆகும்.
உக்ரைன் மீதான ரஷியா போர் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனுக்கு அருகே டினிப்ரோ ஆற்றின் மேற்கு கரையில் உள்ள தனது படைகளை வெளியேற்ற ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு, உக்ரைன் மிகுந்த கவனத்துடன் எதிர்வினை ஆற்றியுள்ளது. ரஷியாவின் உத்தரவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக், "ரஷியப் படைகள் இன்னும் கெர்சனில் இருக்கின்றன. ரஷியாவின் கூடுதல் மனிதவளம் அந்த பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
உக்ரைனியக் கொடி கெர்சனில் பறக்கும் வரை, ரஷியா திரும்பப் பெறுவது பற்றி பேசுவதில் அர்த்தமில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.
No matter how Russia spins it, the retreat from Kherson — the biggest city and only regional capital captured and occupied after the Feb. 24 invasion of Ukraine — is a huge military failure for Putin. https://t.co/eIsSXPzJxP
— Christopher Miller (@ChristopherJM) November 9, 2022
பிப்ரவரியில் ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு, ரஷியா கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் நகரம் ஆகும். இது உக்ரைனிய எதிர் தாக்குதலின் மையமாக இருந்து வருகிறது. 2014இல் ரஷியா இணைத்து கொண்ட கிரிமியா தீபகற்பத்திற்கான ஒரே நிலப் பாதை, இந்த நகரத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகிறது. அதேபோல, உக்ரைனை இரண்டாக பிரிக்கும் டினிப்ரோ ஆற்றின் வாய்ப்பகுதியும் கெர்சன் கீழ்தான் வருகிறது.
ரஷியாவால் நிறுவப்பட்ட அதிகாரிகள் சமீபத்திய வாரங்களாகவே, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர். செப்டம்பர் மாதம், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினால், ரஷியாவில் இணைவதாக அறிவித்த நான்கு பகுதிகளில் கெர்சனும் ஒன்றாகும். அணு ஆயுதத்தின் கீழ் கெர்சன் கொண்டு வரப்படுவதாக ரஷியா அப்போது அறிவித்திருந்தது.
படைகளை திரும்பப் பெறுவது குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜெனரல் செர்ஜி சுரோவிகின், "கெர்சன் நகருக்கு ஆயுதங்கள் வழங்குவது இனி சாத்தியமில்லை என்று ஷோய்குவிடம் தெரிவித்தேன். டினிப்ரோ ஆற்றின் கிழக்குக் கரையில் அதிரடி காட்டாமல் தற்காப்புடன் இருக்க முன்மொழிந்தேன்" என்றார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு, "உங்கள் முடிவுகளையும் முன்மொழிவுகளையும் ஏற்கிறேன். எங்களைப் பொறுத்தவரை, ரஷிய ராணுவ வீரர்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
துருப்புகளைத் திரும்பப் பெறுவதைத் தொடரவும் மற்றும் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே பணியாளர்கள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை பாதுகாப்பாக மாற்றுவதை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.