அதிகரிக்கும் இறப்பு விகிதம்.. தடுப்பூசியை மறுக்கும் மக்கள்.. ரஷ்யாவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு!
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அடுத்த 11 நாள்களுக்குக் கொரோனா காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கடைகள், பள்ளிகள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் அடுத்த 11 நாள்களுக்குக் கொரோனா பெருந்தொற்று காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் கடைகள், பள்ளிகள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 7 வரை, வர்த்தக நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள் முதலானவையும் கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் வகையில் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு, மருந்து முதலான அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் எனவும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ரஷ்யாவும் ஒன்று. ரஷ்யாவில் இதுவரை சுமார் 2.3 லட்சம் பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், உலகின் பிற பகுதிகளைப் போன்ற கடுமையான ஊரடங்குச் சட்டங்கள் ரஷ்யாவில் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான அரசு அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள `ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கி வந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ரஷ்ய மக்களிடையே நிலவும் தயக்கம் தற்போது இப்படியான நிலைக்குக் காரணமாக அமைந்துள்ளது. ரஷ்யாவின் மக்கள்தொகையில் இதுவரை வெறும் 32 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புடின் ரஷ்யா முழுவதும் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுவதாகவும், கொரோனா பாதிப்புகளைக் குறைக்க இந்த நடவடிக்கை பெரிதும் பயன்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. எனினும், மக்கள் வழக்கம் போல் கூடியதோடு, நகரத்தில் மெட்ரோ ரயில்களிலும் மக்கள் முகக்கவசம் எதுவுமின்றி பயணித்ததையும் பார்க்க முடிந்தது.
சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டிருப்பதால், ரஷ்ய மக்கள் வீட்டில் இல்லாமல் இந்த விடுமுறைகளைப் பயன்படுத்தி உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யாவின் சுற்றுலா நகரமான சோச்சி பகுதியின் மேயர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பதோடு, துருக்கி, எகிப்து முதலான நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் விமானப் பயணத்திற்காகவும் கடும் போட்டி நிலவுவதாகக் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 27 அன்று, ஒரே நாளில் ரஷ்யாவில் 1123 பேர் கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஐரோப்பாவிலேயே அதிக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் பதிவாகியுள்ளது. மேலும், ரஷ்யாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 8.3 மில்லியன் பேருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையில் குளறுபடிகள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சில தனியார் நிறுவனங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, இதுவரை ரஷ்யாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இதுவரை 4 லட்சம் பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், ரஷ்ய அரசு தரப்பில் ஊரடங்கு விதிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியில் செல்வதாகவும், அதனைத் தடுக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.