Rishi Sunak New UK PM: பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்.. 10 முக்கிய தகவல்கள் இங்கே..
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கினார் ரிஷி சுனக்.
பிரிட்டன் பிரதமர் போட்டியில் இருந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபை தலைவர் பென்னி மோர்டான்ட் விலகியுள்ள நிலையில், பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்.
2019ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பதவியேற்ற நிலையில், அவரது கட்சிக்குள்ளேயே சுமார் 50 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியதையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
அப்படி போரிஸ் ஜான்சனுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கியவர்களில் ரிஷி சுனக்கும் ஒருவர். போரிஸ் ஜான்ஸனின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளைதான் திருமணம் செய்துள்ளார்.
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கினார் ரிஷி சுனக். ரிஷி சுனக்கின் மூதாதையர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கு ஆப்பிரிக்காவிற்குச் சென்ற அவர்கள் பின்னர் இங்கிலாந்திற்கு 1960களில் குடிபெயர்ந்தனர்.
இங்கிலாந்து சென்ற ரிஷி சுனக்கின் பாட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்ட்டனில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டார். ஓராண்டு அங்கு வேலை செய்து பணம் சேர்த்தபின்பு, தனது கணவர் மற்றும் குழந்தைகளை அங்கு அழைத்துக்கொண்டார். அந்த குழந்தைகளில் ரிஷி சுனக்கின் தாய் உஷா சுனக்கும் ஒருவர். அவர் இங்கிலாந்து சென்றபோது அவருக்கு 15 வயது ஆகியிருந்தது.
நன்றாக படித்த உஷா சுனக் மருந்தாளுனரானார். அங்கு தான் ரிஷியின் தந்தையும் மருத்துவருமான யஷ்வீரை சந்தித்தார். திருமணம் செய்துகொண்ட இருவரும் சவுத்தாம்ப்ட்டனிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர். யஷ்வீர் மற்றும் உஷா சுனக் ஆகியோருக்குப் பிறந்த 3 பேரில் மூத்தவர் தான் ரிஷி சுனக். இவர்தான் தற்போது பிரிட்டன் பிரதமராகி இருக்கிறார்.
JUST IN: @RishiSunak has been elected as the Leader of the Conservative Party pic.twitter.com/Oa52WWwFck
— Conservatives (@Conservatives) October 24, 2022
ரிஷியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட சுய விவர குறிப்பில், "எனது பெற்றோர் உள்ளூர் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்வதைப் பார்த்து வளர்ந்தேன். வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றேன்.
சர்வதேச அளவில் வாழவும், படிக்கவும், வேலை செய்யவும் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. கலிபோர்னியாவில் என் மனைவி அக்சிதாவைச் சந்தித்தேன். அங்கு நாங்கள் பல ஆண்டுகள் வாழ்ந்தோம். எங்களுக்கு கிருஷ்ணா மற்றும் அனோஷ்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். எங்களை அவர்கள் பிஸியாக வைத்து மகிழ்விக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் உடல் பயற்சி செய்வேன். கிரிக்கெட், கால்பந்து போட்டிகளை விளையாடுவேன். திரைப்படங்களை பார்த்து மகிழ்வேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.