Rare Pink Diamond: 300 ஆண்டுகளில் தோண்டி எடுக்கப்பட்ட மிகப்பெரிய பிங்க் நிற வைரம்... அங்கோலா சுரங்கத்தில் கண்டெடுப்பு!
Rare Pink Diamond: இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரங்களில் லுலோ ரோஸும் ஒன்று என்றும், மதிப்புமிக்க வைர வகைகளுள் ஒன்றான இலா (ila) வகையைச் சேர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலா நாட்டில் மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரக்கல் இதுதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய ’பிங்க்’ வைரம்
170 காரட் மதிப்புள்ள இந்த இளஞ்சிவப்பு வைரம், ’த லுலோ ரோஸ்’ என்று அழைக்கப்படுகிறது. அங்கோலாவில் வைரம் நிறைந்த வடகிழக்கில் உள்ள லுலோ சுரங்கத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் இந்த வைரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரங்களில் லுலோ ரோஸும் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதிப்புமிக்க வைர வகைகளுள் ஒன்றான இலா (ila) வைரத்தின் வகையைச் சேர்ந்தது இந்த லுலோ ரோஸ் வைரக்கல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், லுலோ சுரங்கத்தின் பங்குதாரராக உள்ள அங்கோலா அரசாங்கம் வைரம் கண்டெடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இலா வகை வைரம்
இலா வகை வைரங்கள் முற்றிலும் தூய்மையானவை. இவை பெரும்பாலும் நிறமற்றவையாகவும், இயற்கைக் கற்களின் அரிதான வடிவங்களாகவும் உள்ளன.
இந்நிலையில், முன்னதாக இவ்வைரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அங்கோலா கனிமவள அமைச்சர் டயமண்டினோ அசெவெடோ, லுலோ சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த இளஞ்சிவப்பு வைரம் உலக அரங்கில் அங்கோலாவின் முக்கியத்திவத்தை காட்டும் வகையில் அமைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
டெண்டர் முறைப்படி விற்பனை
மேலும், முன்னதாக இந்த வைரம் குறித்து பிரபல வணிக செய்தி தளமான ப்ளூம்பெர்க்கின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கோலா அரசுக்கு சொந்தமான வைர வர்த்தக நிறுவனமான சோடியம் நடத்தும் சர்வதேச டெண்டர் மூலம் வைரம் விற்கப்படும். லுலோ ரோஸின் உண்மையான மதிப்பை உணர, வைரத்தை வெட்டி மெருகூட்ட வேண்டும்.
வைரத்தை வெட்டி மெருகேற்றினால் அதன் எடையில் 50 விழுக்காடு குறையும். இதற்கு முன்பும் இதே போன்ற இளஞ்சிவப்பு வைரங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
2017ஆம் ஆண்டில், 59.6 காரட் மதிப்புமிக்க இளஞ்சிவப்பு வைரமான பிங்க் ஸ்டார், ஹாங்காங் ஏலத்தில் $71.2 மில்லியன் டாலர்கள் (568. 89 கோடி சொச்சம்) விலைக்கு விற்கப்பட்டது. இதுவரை விற்கப்பட்ட வைரங்களில் மிகவும் விலை உயர்ந்த வைரமாக பிங்க் ஸ்டார் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

