Pope Francis: 38 நாட்களுக்கு பின் இல்லம் திரும்பிய போப் பிரான்சிஸ்: மருத்துவமனையில் இருந்து ஆசி!
Pope Francis : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று போப் பிரான்சிஸ், உடல்நிலை சீரானதை தொடர்ந்து நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

போப் பிரான்சிஸ் நுரையீரல் அழற்சியின் காரணமாக, ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகளைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சையின் பலனாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, நேற்று பிரான்சிஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார்.
போப் பிரான்சிஸ் நுரையீரல் தொற்று:
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை முதல் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சுக்குழாய் அழற்சி தொற்றுக்காக, சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு செயற்கை ஆக்சிஜன் வழங்கும் முறையயானது மூக்கு வழியாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் போப் பிரான்சிஸின் உடல் நிலையில், சீரான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த மார்ச் 6 ஆம் தேதி , வியாழக்கிழமையன்று, தனக்காக செபிக்கும் மக்களுக்கு அவர் நன்றி கூறும் ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து செயற்கை ஆக்சிஜன் முறையானது நீக்கப்பட்டது.
ஆசி வழங்கிய போப்
அதனைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் மார்ச் 23, நேற்றைய தினம் மருத்துவமனையின் பால்கனி தளத்தில் இருந்தவாறே பொதுமக்களைச் சந்தித்து ஆசீர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து நாற்காலியில் அமர்ந்தவாறே, மருத்துவமனையில் இருந்து, சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார். அப்போது, இல்லம் திரும்புகையில் ஜெமெல்லி மருத்துவமனையின் வளாகத்தில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மெலிதான குரலில் “அனைவருக்கும் நன்றி” என்று கூறி, கூடியிருந்த மக்கள் அனைவரையும் பார்த்து கையசைத்து வாழ்த்தினார். இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த அனைவரையும் வாழ்த்திவிட்டு விடைபெற்றார்.
Also Read: Solar Eclipse: பகலில் மறையும் சூரியன்.! வருடத்தின் முதல் சூரிய கிரகணம்: எப்போது?
Also Read: சுனிதா வில்லியம்ஸ் திரும்பியதற்கு டிரம்ப்தான் காரணமா? வெடிக்கும் அரசியல்..உண்மை என்ன?

