Pennsylvania Baby Shot Dead: அமெரிக்காவில் துப்பாக்கியால் சுட்ட 3 வயதுக் குழந்தை- பச்சிளங் குழந்தை பலி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் 3 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் 3 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சுடுதல் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பென்சில்வேனியா மாகாணத்தின் லான்காஸ்டரில் கடந்த செவ்வாய்க்கிழமை கொலை நடந்ததாக தகவல் கிடைத்தது. இரவு 7.05 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றோம். அப்போது கைக்குழந்தை முகத்தில் காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டோம். இதுதொடர்பாக வீட்டின் பெரியவர்களிடம் விசாரித்து வருகிறோம்.
அதிகாரிகள் குழந்தைக்கு மருத்துவ உதவி செய்தனர். அவசர மருத்துவ சேவை பணியாளர்கள் மூலம் உதவினர். மருத்துவப் பணியாளர்கள் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் தாத்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், "கைக்குழந்தையை துப்பாக்கியால் சுட்ட குழந்தையும் உறவினர் தான்" என்று வருத்தத்துடன் கூறினார். உள்ளூர் மத போதகர் கார்மென் மோரல்ஸ், குழந்தையின் இறுதிச்சடங்கிற்காக GoFundMe பக்கத்தை உருவாக்கினார்.
முன்னதாக, கடந்த மாதம் அமெரிக்காவின் பூங்கா ஒன்றின் அருகே நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் சம்பவத்தில் 8 பேர் வரை உயிரிழந்தனர்.
இதேபோல், கடந்த வாரம் அமெரிக்காவின் வட கரோலினாவின் தலைநகர் ராலெயிவில் திடீரென்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் அடைந்தனர். மேலும் அதில் 5 பேர் இறந்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில், காரணமே இல்லாமல் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் பலர் இறந்து வருகின்றனர். அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் சுமார் 34,000 பேருக்கும் அதிகமானோர் இறந்தனர் என்று கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி கலாச்சாரத்தைக் குறைப்பதன் மூலம் அதிகரிக்கும் பலி எண்ணிக்கைகளைக் குறைக்கலாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது. 2017ம் ஆண்டின் படி சுமார் 400 மில்லியன் துப்பாக்கிகள் அமெரிக்க குடிமக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.