Papua New Guinea: பழங்குடியினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதல் - பப்புவா நியூ கினியாவில் 64 பேர் சுட்டுக்கொலை
Papua New Guinea tribal clashes: பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில், 64 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
Papua New Guinea tribal clashes: பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 64 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்க மாகாணத்தின் வபெனமண்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் இந்த மோதல் தொடங்கியதாக கூறப்படுகிறது. AK47 மற்றும் M4 துப்பாக்கிகள் போன்ற உயர் திறன் கொண்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த மோதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வபாக் நகருக்கு அருகில் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிக்கின் மற்றும் கெய்கின் பழங்குடியினருக்கு இடையிலான நீண்டகால பகைமை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பன்னெடுங்காலமாக இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தாலும், தானியங்கி ஆயுதங்களின் வருகை மோதல்களை மிகவும் கொடியதாக்கியதோடு வன்முறையை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எங்க மாகாணத்தில் 60 பேரைக் கொன்ற மோதல்களுக்கும், இந்த பழங்குடியினரே காரணம் என ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் தெரிவித்துள்ளது.
ராணுவம் குவிப்பு:
மோதல் தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களே அந்த இடத்தை அடைந்து இருப்பதால், அவர்களால் இன்னும் சூழல கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என கூறபடுகிறது. இதனால், அங்கு கூடுதல் படையை குவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். நிலம் மற்றும் அங்குள்ள வளங்களை பகிர்ந்துகொள்வது ஆகியவற்றில் தான், இருதரப்பினரிடையே பெரும்பாலும் மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மோதலால் எங்காவில் மூன்று மாத லாக்டவுன் போடப்பட்டது. அந்த சமயம் அங்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டன.