Pakistan: சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடாக மாறும் பாகிஸ்தான்! ஆசியாவிலே ஒரே நாடு! அதிர்ச்சி தரும் அறிக்கை!
Pakistan Authoritarian Regime: ஜனநாயகக் குறியீடு தொடர்பான அறிக்கையில் பாகிஸ்தான் சர்வாதிகார ஆட்சி நாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Pakistan Authoritarian Regime: ஜனநாயகக் குறியீடு தொடர்பான அறிக்கையில் 11 புள்ளிகளை இழந்து, ஆசியாவிலேயே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடு என்ற தரநிலையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
”சர்வாதிகார ஆட்சி நடைபெறும் பாகிஸ்தான்”
பொருளாதார புலனாய்வுப் பிரிவின் (EIU) ஜனநாயகக் குறியீடு 2023 அறிக்கையில், 11 புள்ளிகளை இழந்த பாகிஸ்தான் "சர்வாதிகார ஆட்சியாக" தரமிறக்கப்பட்டுள்ளது. அதோடு, உலக மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர் மட்டுமே "முழு ஜனநாயகத்தில்" வாழ்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”ஏஜ் ஆஃப் கான்ஃப்ளிக்ட்” என்று தலைப்பிலான இந்த ஆய்வு, 165 சுதந்திர மாநிலங்கள் மற்றும் இரண்டு பிரதேசங்களில் ஜனநாயகத்தின் நிலையை விவரிக்கிறது.
சர்வாதிகார ஆட்சி:
இதுதொடர்பான அறிக்கையின்படி, ஆசிய பிராந்தியத்தில் பாகிஸ்தான் இதுவரை எந்தவொரு நாடும் சந்தித்திராத மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி, அந்நாட்டிற்கான ஜனநாயகக் குறியீட்டிற்கான மதிப்பெண் 3.25 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 'ஹைப்ரிட் ஆட்சி' எனும் நிலையில் இருந்து 'சர்வாதிகார ஆட்சிக்கு' தரமிறங்கியுள்ளது.
இந்த பட்டியலில் இவ்வளவு குறிப்பிடத்தக்க அளவில் தரமிறக்கப்பட்ட ஒரே ஆசிய நாடு பாகிஸ்தான் ஆகும். அதேநேரம், எதிர்க்கட்சிகள் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகும் வங்கதேசம் மற்றும் ரஷ்யாவில் இதுபோன்ற எந்தவொரு தரநிலை மாற்றமும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
காரணங்கள் என்ன?
பாகிஸ்தானின் தரநிலை இறக்கத்திற்கு, ”தேர்தல் செயல்முறை, பன்மைத்துவம் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடு ஆகியவை காரணங்களாக கூறப்படுகிறது. EIU குறிப்பிடும்போது, "இராணுவத்தின் அதீதமான அரசியல் செல்வாக்கு... தேர்தல்கள் சுதந்திரமான, நியாயமானவை அல்லது போட்டித்தன்மை இல்லாதது” என தெரிவித்துள்ளது. ஜனநாயகக் குறியீட்டிற்கான இந்த பட்டியலில், நார்வே, நியூசிலாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
வடகொரியா, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை முறையே கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் அந்நாட்டின் ஜனநாயகக் குறியீடு என்பது, 4-க்கும் சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவில், முஸ்லீம் லீக் நவாஸ், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் JUI-F ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ள சூழலில் பாகிஸ்தானுக்கான ஜனநாயகக் குறியீடு இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. அதாவது, ஜனநாயகத்திற்கான உலக தரவரிசைப் பட்டியலில் 11 இடங்கள் சரிந்து 118ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
சரிந்த ஜனநாயக விகிதம்:
ஜனநாயக நாடுகளாக வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், உலகளாவிய சராசரி குறியீட்டு மதிப்பெண் 2023 இல் 5.23 ஆகக் குறைந்துள்ளது. இதன்மூலம், 2006-இல் வெளியிடப்பட்ட முதல் ஆய்வுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவு இதுவாகும். இது முந்தைய ஆண்டு 5.29 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023 இல் ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இரண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, பராகுவே மற்றும் பப்புவா நியூ கினியா ஆகியவை "ஹைப்ரிட் ஆட்சிகளில்" இருந்து "குறைபாடுள்ள ஜனநாயக நாடுகளாக" மேம்பட்டுள்ளன. கிரீஸ் "முழு ஜனநாயகம்" ஆனது, ஆனால் சிலி ஜனநாயகக் குறியீடு 2023 இல் "குறைபாடுள்ள ஜனநாயகம்" என மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.