Suicide Attack: பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்: 39 பேர் உயிரிழப்பு.. பயங்கரவாதிகள் அட்டூழியம்
அரசியல் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தான் பஜார் மாவட்டத்தில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 39 பேர் உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வடமேற்கு பாகிஸ்தானில் அரசியல் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் கட்சியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி கூட்டத்தில் தற்கொலை தாக்குதல்:
ஆளுங்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கர் நகரில் தாக்குதல் நடந்தபோது 400க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர்.
இந்த தாக்குதலில் சிக்கி கையில் முறிவு ஏற்பட்ட சபீஹ் உல்லாஹ் என்பவர் சம்பவம் குறித்து விவரிக்கையில், "மத்திய தலைமையின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தபோது, திடீரென பலத்த இடி சத்தம் கேட்டது. அது, அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. கைகால்களை இழந்த ஒருவரின் அருகில் நான் படுத்திருந்தேன். அந்த பகுதியை ரத்த வாசனை சூழ்ந்திருந்தது" என்றார்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் சுகாதார அமைச்சர், இதுகுறித்து கூறுகையில், "உள்ளூர் மருத்துவமனைகளில் 39 பேர் உயிரிழந்தனர். 123 பேர் காயமடைந்தனர். இதில், 17 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர். இது ஒரு தற்கொலைத் தாக்குதல், மேடைக்கு அருகாமையில் குண்டுதாரி தன்னைத்தானே வெடிக்கச் செய்தார்" என்றார்.
அரசியல் கட்சி கூட்டத்தில் அசம்பாவிதம்:
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்தைச் சுற்றி உடல்கள் சிதறிக் கிடப்பதை அதில் காணலாம். ரத்த வெள்ளத்தில் கிடப்பவர்களை தன்னார்வலர்கள் ஆம்புலன்ஸ்களில் ஏற்ற உதவி வருகின்றனர். இதற்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில் நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முடிவடைகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி, பாகிஸ்தான் நாடாளுமன்றம் (NA) கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இம்மாதிரியான சூழலில், அரசியல் கட்சி கூட்டத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சீனாவின் துணைப் பிரதமர் ஹெ லைஃபெங் உள்பட சீன அரசின் மூத்த பிரதிநிதிகள் குழு, இன்று மாலை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு செல்லவிருந்த நிலையில், குண்டிவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளை, ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் கட்சியை குறிவைத்து சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.