தெய்வத்துக்கே மாறு வேசமா.. எலன் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் 1 பணக்காரரான லாரி எலிசன்
நீண்ட காலம் முதலிடத்தை தக்க வைத்திருந்த எலான் மஸ்க்கை தற்போது முந்தி, நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்த எலான் மஸ்க்கை பின்னுக்குத்தள்ளி நம்பர் 1 பணக்காராக மாறியுள்ளார் ஆரக்கிள் கார்ப் நிறுவன தலைவரான லாரி எலிசன்.
ஆரக்கிள் கார்ப்பரேஷன் காலாண்டு முடிவுகள் வெளியானவுடன், நிறுவன பங்குகளில் ஏற்பட்ட அதிரடி ஏற்றம், உலகின் பணக்காரர்களின் பட்டியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பட்டியலில் நீண்ட காலம் முதலிடத்தை தக்க வைத்திருந்த எலான் மஸ்க்கை தற்போது முந்தி, நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் உலகின் நம்பர் 1 பணக்காரராக உயர்ந்துள்ளார்.
$101 பில்லியன் ஒரே நாளில் – சாதனை உயர்வு
புதன்கிழமை மட்டும் ஆரக்கிள் பங்குகள் 41% உயர்ந்தன, இது 1992க்குப் பிறகு இல்லாத அளவுக்கு பெரும் உயர்வு. இதன் விளைவாக நிறுவனத்தின் சந்தை மதிப்பு $947 பில்லியனாக உயர்ந்தது.இந்த பங்குச் சதவீத உயர்வால் லாரி எலிசனின் தனிப்பட்ட சொத்துமதிப்பானது ஒரே நாளில் $101 பில்லியன் அதிகரித்தது. தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு $393 பில்லியன் என்ற சாதனையை எட்டியுள்ளது. இதே வேளையில் எலோன் மஸ்க்கின் செல்வம் $385 பில்லியன் மட்டுமே இருந்ததால், அவர் இரண்டாம் இடத்துக்கு சரிந்தார்.
கிளவுட் வணிகமே வெற்றியின் திறவுகோல்
ஆரக்கிள் பங்குகளில் ஏற்பட்ட இந்த அதிரடி ஏற்றம், நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கிளவுட் வணிகம் மீது வலுவான கவனம் செலுத்தியதன் விளைவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெருகியதால் இந்த ஆண்டு இதுவரை ஆரக்கிள் பங்குகள் 45% வளர்ச்சி கண்டுள்ளன. இதுவே எலிசனின் செல்வத்திற்கு இதுவரை இல்லாத அளவு வேகமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஸ்கின் நீண்டகால ஆதிக்கம் முறியடிப்பு
2021 ஆம் ஆண்டு முதல் உலகின் எண் 1 பணக்காரர் பட்டத்தை எலான் மஸ்க் கைப்பற்றினார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்ஹெச் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் போன்றோர் சில நேரங்களில் அவரை முந்தினாலும், மீண்டும் முதலிடத்துக்கு மஸ்க் திரும்பினார் என்பதே வரலாறு.
ஆனால் இப்போது, ஆரக்கிள் பங்குகள் திடீர் ஏற்றம் கண்டதன் விளைவாக, மஸ்கின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டு, லாரி எலிசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
யார் இந்த லாரி எலிசன்?
லாரன்ஸ் ஜோசப் எலிசன், சிகாகோவில் பிறந்தவர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் படித்த அவர், படிப்பை நிறைவு செய்யாமல் விட்டு வெளியேறினார். 1977-ல், பாப் மைனர் மற்றும் எட் ஓட்ஸ் ஆகியோருடன் சேர்ந்து Software Development Laboratories-ஐ நிறுவினார். அது தான் பின்னர் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமாக வளர்ந்த ஆரக்கிள் கார்ப்பரேஷன் ஆனது. 81 வயதான எலிசன், இன்னும் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார். அவரது செல்வத்தின் பெரும்பகுதியும் மென்பொருள் துறையிலான முதலீடுகளிலிருந்து வந்ததே என்பது ஆகும்.






















