நடுக்கடலில் 12 பேருடன் கவிழ்ந்த கப்பல்.. கடும் காற்றால் தாமதமாகும் மீட்புப் பணி..
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் நடுக்கடலில் வணிகக் கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாநிலத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி எண்ணெய் பரிமாற்றத்துக்காக செயல்பட்டுவரும் அந்த வணிக கப்பலில் 12 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியதையடுத்து, காற்று சுமார் 125 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய நிலையில் கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.
அதில் இருந்த 12 தொழிலாளர்களில் ஏற்கனவே 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருடைய சடலமும் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேரை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவுவதால் தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த சில மணிநேரங்களிலேயே தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில், கடந்த 40 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப்பணி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.