Nobel Prize Trump: அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு; ட்ரம்ப்புக்கு கிடைக்குமா.?; இதுவரை வென்ற அதிபர்கள் யார்.?
அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படும் நிலையில், அது ட்ரம்ப்புக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இதுவரை அந்த பரிசை வென்றுள்ள அமெரிக்க அதிபர்கள் யார் யார் தெரியுமா.?

அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் யார் என்பது குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தனக்குத்தான் அந்த விருது கிடைக்கும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இன்று அமலான இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம் வரை, மொத்தம் 8 போர்களை நிறுத்தியுள்ளதாக அவர் கூறிவரும் நிலையில், நோபல் பரிசுக்கு சில நாடுகளால் அவர் முன்மொழியப்பட்ட போதே 7 போர்களை நிறுத்தியதாக கூறி வந்தார். அவருக்கு நோபல் பரிசு கிடைக்குமா என்பது இன்று தெரிந்துவிடும். இப்போது, இதுவரை நோபல் பரிசை வென்றுள்ள அமெரிக்க அதிபர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
இதுவரை நோபல் பரிசு வென்ற அமெரிக்க அதிபர்கள்
அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப் கோரிவரும் நிலையில், இதற்கு முன் 4 அமெரிக்க அதிபர்கள் மற்றும் ஒரு அமெரிக்க துணை அதிபர் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர்.
பராக் ஒபாமா(2009)
44-வது அமெரிக்க அதிபரான ஒபாமா, தான் பதிவியேற்ற ஒரு வருட காலத்திற்குள்ளாகவே, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான அவரது பரிந்துரைகள் உட்பட, "சர்வதேச ராஜதந்திரத்தையும், மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான அசாதாரண முயற்சிகளுக்காக" நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அல் கோர்(2007)
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர், அதிபராக இல்லாவிட்டாலும், "மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த அதிக அறிவை வளர்த்து பரப்புவதற்கான அவரது முயற்சிகளுக்காக", 2007-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை, காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவுடன்(IPCC) பகிர்ந்து கொண்டார்.
ஜிம்மி கார்ட்டர்(2002)
அமெரிக்காவின் 39-வது அதிபரான ஜிம்மி கார்ட்டர், பதவியில் இருந்து விலகி 21 ஆண்டுகளுக்குப் பிறகு நோபல் பரிசை பெற்றார், "சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் காணவும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றவும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தவும் பல தசாப்தங்களாக அயராத முயற்சிக்காக" அவர் இந்த விருதைப் பெற்றார்.
உட்ரோ வில்சன்(1919)
அமெரிக்காவின் 28-வது அதிபரான வில்சன், முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும், அமைதியை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உலகின் முதல் அரசுகளுக்கிடையேயான அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸை உருவாக்கியதிலும் அவர் ஆற்றிய பங்கிற்காக அங்கீகரிக்கப்பட்டார்.
தியோடர் ரூஸ்வெல்ட்(1906)
நோபல் பரிசைப் பெற்ற முதல் அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்ட்டுக்கு, போர்ட்ஸ்மவுத் ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்ய-ஜப்பானியப் போருக்கு மத்தியஸ்தம் செய்ததற்காக விருது வழங்கப்பட்டது. அவரது பதக்கம் இன்னும் வெள்ளை மாளிகையின் மேற்குப் பிரிவின் ரூஸ்வெல்ட் அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நோபல் குழுவை நம்பாத ட்ரம்ப்
நோபல் பரிசு ட்ரம்ப்பிற்கு கிடைக்குமா என்ற கேள்விகள் இருந்துவரும் நிலையில், நேற்று வெள்ளை மாளிகை, ட்ரம்ப்பின் படத்தை "அமைதிக்கான அதிபர்" என்ற தலைப்புடன் பகிர்ந்து கொண்டது. உலகின் மிகவும் மதிப்புமிக்க அமைதி விருதை பெறுவதற்கான ட்ரம்பின் அவ்வளவு நுட்பமான பிரசாரத்தில் இது சமீபத்தில் சேர்க்கப்பட்டதாகும்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒரு அமைதி ஒப்பந்தத்தை உள்ளடக்கிய ஏழு சமாதான ஒப்பந்தங்களை மத்தியஸ்தம் செய்ததற்காக மீண்டும் மீண்டும் பெருமை சேர்த்து வந்தார் ட்ரம்ப். அவரது கூற்றை இந்தியா உறுதியாக மறுத்துள்ளது. இதனிடையே, நோபல் குழு தனக்கு இந்த கௌரவத்தை மறுப்பதற்கான "காரணத்தை கண்டுபிடிக்கும்" என்று ட்ரம்ப் கூறினார்.
ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த நாடுகள்
ட்ரம்ப் 2 முறை ட்ரம்ப் பதவியில் இருந்த காலத்தில், இந்த விருதுக்கு பல முறை அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கம்போடியாவின் ஹன் மானெட், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தால் அவர் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.





















