Nigeria Kidnapping: கொத்து கொத்தாக குழந்தைகளை கடத்தும் நைஜீரியர்கள்: பிணைத் தொகை கொடுத்து மீட்கும் பெற்றோர்!
நைஜீரியாவில் கொத்து கொத்தாக குழந்தைகளைக் கடத்திச் செல்லும் கடத்தல்காரர்கள் பெற்றோரை மிரட்டி பணம் பெற்றுக் கொண்டு குழந்தைகளை விடுவிக்கும் அவல நிலை நிலவுகிறது.
![Nigeria Kidnapping: கொத்து கொத்தாக குழந்தைகளை கடத்தும் நைஜீரியர்கள்: பிணைத் தொகை கொடுத்து மீட்கும் பெற்றோர்! Nigeria Kidnapping: Gunmen release 15 more students abducted in northwest Nigeria Nigeria Kidnapping: கொத்து கொத்தாக குழந்தைகளை கடத்தும் நைஜீரியர்கள்: பிணைத் தொகை கொடுத்து மீட்கும் பெற்றோர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/23/916ecc67266543ccf5ae13103301a899_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நைஜீரியாவில் கொத்து கொத்தாக குழந்தைகளைக் கடத்திச் செல்லும் கடத்தல்காரர்கள் பெற்றோரை மிரட்டி பணம் பெற்றுக் கொண்டு குழந்தைகளை விடுவிக்கும் அவல நிலை நிலவுகிறது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள டாமிஷி எனும் நகரில் உள்ள பெத்தல் பேப்டிஸ்ட் பள்ளியில் இருந்து கடந்து ஜூலை 5 ஆம் தேதி 65 குழந்தைகளைக் கடத்திச் சென்றனர். குழந்தைகளைக் கடத்திச் செல்லும் இந்த கொள்ளைக்காரர்கள் அவர்களை விடுவிக்க பெருந்தொகையை பிணைத் தொகையாக நிர்ணயிக்கின்றனர். குறைந்தபட்சமாக 500,000 நைஜர் ( 1,220 அமெரிக்க டாலர்) பிணைத் தொகையாகக் கேட்கின்றனர். அதனைக் கொடுக்கும் பெற்றோரிடம் அவர்களின் குழந்தைகளைக் கொடுக்கின்றனர். நேற்று, இந்த வகையில் 15 குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து ஏபி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த உள்நாட்டு பாதுகாப்பு மாநில ஆணையர் சாமுவேல் அருவான் கூறுகையில், "சனிக்கிழமை இரவு 15 குழந்தைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இதுவரை கடத்தல் கும்பல் 28 பேரை ஒருமுறையும், 34 பேரை இன்னொரு முறையும் விடுவித்துள்ளது. ஒருசில மாணவர்கள் லாவகமாக தப்பியும் வந்துள்ளனர்.
1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தல்:
நைஜீரியாவின் வடக்கு மாகாணங்களில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி இதுவரை 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறாக கடத்தப்படுபவர்களில் பெரும்பாலான மாணவர்களை பிணைத் தொகை பெற்றுக் கொண்டு விடுவித்துவிடுகின்றனர். ஒருசிலர் மட்டுமே விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர். தொடர்ச்சியாக குழந்தைகள் கடத்தல் நடைபெறுவதால் அங்கு பல்வேறு அரசுப் பள்ளிகளும் மூடிக்கிடக்கின்றன.
சனிக்கிழமையன்று 15 குழந்தைகள் விடுவிக்கப்பட்டதை பெற்றோர் கொண்டாடி வரும் நிலையில், தங்களின் குழந்தைகளை மீட்க முடியாத பெற்றோர் ஏக்கத்தில் உள்ளனர்.
குழந்தைகள் கடத்தப்படுவது ஏன்?
நைஜீரியாவில் போகோ ஹராம் எனும் தீவிரவாத கும்பல் உள்ளது. இந்தக் கும்பல் தனக்கு ஆள் தேவைப்படுவதால் உள்ளூர் கொள்ளைக்காரர்களை தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் வழக்காக தங்களின் பணத்தேவைக்காகவே கடத்தலில் ஈடுபடுகின்றனர். ஆனால், தற்போது போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு குழந்தைகளை கடத்திக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தீவிரவாத அமைப்பு, ஆண் குழந்தைகளை தீவிரவாதிகளாகவும், பெண் குழந்தைகளை பாலியல் அடிமைகளாகவும் மாற்றிவிடுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
போகோ ஹராம் தீவிரவாதிகள், நைஜீரியா முழுமையும் ஷாரியாத் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று போராடும் இஸ்லாமியக் குழு. இந்தக் குழுவுக்கு ஒற்றைத் தலைமை என்று ஏதும் இல்லை. இருந்தாலும், இந்தக் குழுவால் நைஜீரியாவில் சட்டம் ஒழுங்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவ்வப்போது எண்ணெய்க் கிணறுகளுக்கு தீ வைப்பது போன்ற நாசவேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)