Israel Trump: கெட்ட வார்த்தையில் திட்டிய ட்ரம்ப்.. ”அய்யா மன்னிச்சிருங்க இனி தப்பு நடக்காது” கும்புடு போட்ட நேதன்யாகு
Israel Trump: கத்தார் மீது நடத்திய ராணுவ தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.

Israel Trump: கத்தார் மீது நடத்திய இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் கடுமையாக எதிர்வினையாற்றியது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் முத்தரப்பு பேச்சுவார்த்தை:
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி ஆகியோருடன் திங்கட்கிழமை ஓவல் அலுவலகத்தில் முத்தரப்பு தொலைபேசி உரையாடலை நடத்தியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், இத்தகைய உரையாடல் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும், அதே நேரத்தில் தவறான கருத்துக்களை நிவர்த்தி செய்து அமெரிக்காவுடனான இரு நாடுகளின் நீண்டகால உறவுகளை கட்டியெழுப்ப முடியும் என்றும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கோரிய நேதன்யாகு..
இந்த உரையாடலின் போது. அண்மையில் தங்களது ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கத்தார் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மன்னிப்பு கேட்டார். பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஹமாஸ் தலைமையை குறிவைத்து நடத்தப்பட்ட தங்களது தாக்குதல், கத்தார் இறையாண்மையை மீறியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். எதிர்காலத்தில் இஸ்ரேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் என்று நேதன்யாகு உறுதியளித்துள்ளார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்வதற்கான கத்தாரின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, நேதன்யாகுவின் உறுதிப்பாட்டிற்கு கத்தார் வரவேற்பு தெரிவித்துள்ளது.
கெட்ட வார்த்தையில் திட்டிய ட்ரம்ப்
இந்த மாத தொடக்கத்தில் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதல் குறித்து அறிந்ததும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடும் கோபம் கொண்டதாக கூறப்படுகிறது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியின்படி, வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் நடந்த உயர்மட்ட ஆலோசனையின் போது, நேதன்யாகுவின் நடவடிக்கைகள் குறித்த விரக்தியை வெளிப்படுத்திய ட்ரம்ப் மோசமான வார்த்தைகளை ( ”He Is F***ing Me” ) பயன்படுத்தி, அவர் தன்னை ஏமாற்றுவதாகவும் பேசியுள்ளார். அதேநேரம் இஸ்ரேலிய தலைவருடனான உறவை பகிரங்கமாக முறித்துக் கொள்ள மாட்டேன் என்று ட்ரம்ப் உறுதியளித்தாராம். ட்ரம்ப் முன்மொழிந்த அமைதி முயற்சியைப் பற்றி விவாதிக்க கூடியிருந்த மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதே அவரது கடும் கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
ட்ரம்பிடம் அடிபணிந்த நேதன்யாகு:
தனது மிகச் சிறந்த நண்பர் என்று அடிக்கடி வர்ணிக்கும் நேதன்யாகுவுடனான உறவில் வளர்ந்து வரும் விரிசல்களை ட்ரம்பின் இந்த கோபம் வெளிக்காட்டியது. ஈரான், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் கத்தார் வரை இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது ட்ரம்பின் பொறுமையை சோதித்துள்ளது. இந்த நிலையில் தான் கோபத்தின் உச்சிக்கு சென்ற ட்ரம்ப், தொலைபேசி வாயிலாக முத்தரப்பு பேச்சுவார்த்தியை நடத்தி, கத்தார் மீதான தாக்குதலுக்கு நேதன்யாகுவை மன்னிப்பு கோரச் செய்துள்ளார். அதோடு, காஸா மீதான போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்க கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், விரைவில் காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்பின் ஆதரவு இல்லாவிட்டால், தன் மீது நிலவும் போர்க்குற்றங்களுக்கு கடும் பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சத்திலேயே நேதன்யாகு அடிபணிந்து செல்வதாக கூறப்படுகிறது.





















