TikTok Astrologer Arrest: மக்கள இப்படியாடா பயமுறுத்தறது.?! 21 வயது டிக்டாக் ஜோதிடரை தட்டித்தூக்கிய போலீஸ்.. எங்கு தெரியுமா.?
தற்போதெல்லாம், இணையத்தில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்றாகிவிட்டது. ஆனாலும், சர்ச்சை பதிவுகளால் சிலர் கம்பி எண்ணவும் செய்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் இது.

மியான்மர் நிலநடுக்கம் குறித்து டிக்டாக்கில் கணிப்பு வீடியோ வெளியிட்டு, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திய 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோவில் அவர் அப்படி என்ன கூறினார்.? பார்க்கலாம் வாருங்கள்..
3,500-க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மியான்மர் நிலநடுக்கம்
மியான்மரில் கடந்த மார்ச் 28-ம் தேதி, மாண்டலே என்ற பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 12 நிமிடங்களுக்குப் பிறகு, தெற்கே 31 கிலோ மீட்டர் தொலைவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டதுடன், 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடுமையான குலுக்கலை ஏற்படுத்திய இந்த நில அதிர்வால், உள்கட்டமைப்புகளில் கடும் சேதம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் குறித்து கணிப்பு வீடியோ வெளியிட்ட 21 வயது டிக்டாக் ஜோதிடர்
இது நடந்த சுவடு மறைவதற்குள், ஏப்ரல் 9-ம் தேதியன்று, ஜான் மோ தி என்ற 21 வயது டிக்டாக் ஜோதிடர் ஒருவர், அடுத்த நிலநடுக்கம் குறித்த தனது கணிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஏப்ரல் 21-ம் தேதி மீண்டும் ஒரு நிலநடுக்கம் மியான்மரை தாக்கும் என்றும், அதனால், அந்த நேரத்தில், முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்டு, பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களை விட்டு ஓடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஏப்ரல் 21-ம் தேதி உயரமான கட்டிடங்களில் யாரும் இருக்காதீர்கள் என்று அந்த வீடியோவிற்கு தலைப்பும் வைத்துள்ளார். 3 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட அவரது டிக்டாக் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, 30 லட்சம் பார்வைகளைக் கடந்த இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜான் மோ தி-யை கைது செய்த போலீசார்
ஜான் மோ தி-யின் வீடியோ இணையத்தில் வைரலாகி ஏராளமானோர் பயத்தில் உறைந்துள்ளனர். இதையடுத்து, தகவல் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், பொய்யான தகவலை பரப்பி மக்களை பயமுறுத்தியதற்காக, அந்த டிக்டாக் ஜோதிடரின் மத்திய மியான்மர் பகுதியில் இருந்த வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு சோதனையும் மேற்கொண்டு, அந்த இளைஞரை கைதும் செய்தனர்.
இதனிடையே, நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சிக்கலான புவியியல் காரணிகளை வைத்து பார்க்கும்போது, அவற்றை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது சாத்தியமற்றது என்று நிபுணர்கள் தெரிவிப்பதாக தகவல் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த இளைஞரின் டிக்டாக் பக்கமும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.





















