Afghanistan Border: ஆப்கானிலிருந்து பாய்ந்த குண்டுகள்... 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தான் மண்ணை பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது
ஆப்கானிஸ்தானிலிருந்து போராளிகள் எல்லை தாண்டி நடத்திய தாக்குதலில் 2 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய 2 வாரங்களில் பாகிஸ்தான் எல்லை தாண்டி நடத்தப்படும் முதல் தாக்குதல் இதுவாகும்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது தாங்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 அல்லது 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் பாகிஸ்தான் விளக்கம் அளித்து இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்து உள்ள பாஜூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
பத்திரிகையாளர்கள், மனித உரிமை அமைப்புகள், பிற பகுதிகளை சேர்ந்தவர்களின் நடமாட்டம் அதிகம் இல்லாத இப்பகுதியில் அதிகளவிலான பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். எனவே இதுகுறித்த முழுமையான அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்கவில்லை.
இந்த பழங்குடியின பகுதியில் தெஜ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) என்ற போராளிகள் அதிகளவில் உள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலை கைப்பற்றிய பிறகு, TTP தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் உள்ள பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் தங்கள் மீது தாக்குதலை நடத்தியதால் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்ததுடன் ஆப்கானிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது.
பாகிஸ்தான் ராணுவம் தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், இந்த தாக்குதலின் பின்னணியில் TTP இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், டெலிகிராம் செயலி மூலம் தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு அந்த அமைப்பு மறுப்பு தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து உள்ள பாகிஸ்தான், ”ஆப்கானிஸ்தான் மண்ணை பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் அரசு இதை அனுமதிக்கக்கூடாது” என்றும் வலியுறுத்தி இருக்கிறது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹ்மத், “பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் தாலிபான்காள் இடம் தரக்கூடாது என எதிர்பார்க்கிறோம்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் TTP அமைப்பு ஆப்கானிஸ்தானை கேந்திரமாக கொண்டு பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலில் 9 சீன பணியாளர்கள், 4 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் அரங்கேறும் நிகழ்வுகளால் பாகிஸ்தானில் வன்முறை பரவும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் பாபர் இஃப்திகார் தெரிவித்து உள்ளார்.
”ஆப்கானிஸ்தான் மண்ணில் எந்த போராளிக் குழுவையும் அனுமதிக்க மாட்டோம்” என தாலிபான் செய்தித் தொடர்பாளர், சபிஹுல்லா முஹைத் தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.