கட்டடத்தில் காரை மோதிய நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! - அமெரிக்க நாடாளுமன்றம் அருகே பரபரப்பு
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகே ஒரு நபர் தனது காரை அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துகுள்ளாக்கி உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகே ஒரு நபர் தனது காரை அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துகுள்ளாக்கி உள்ளார். பின்னர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னை தானை சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நபர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. அவரின் நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவில்லை அமெரிக்க நாடாளுமன்ற காவல்துறை தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத அந்த நபர், தடுப்பில் மோதியதாகவும், அவர் காரில் இருந்து இறங்கும் போது, வாகனம் தீப்பிடித்து எரிந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர். பின்னர், அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் போலீசார் நெருங்கியபோது, வானத்தை நோக்கி அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
அலுவலர்கள் நெருங்கியபோது அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக நாடாளுமன்ற போலீசார் அறிவித்தனர்.
"அந்த நபர் எந்த நாடாளுமன்ற உறுப்பினரையும் குறிவைத்ததாகத் தெரியவில்லை. விசாரணையாளர்கள் அந்த நபரின் பின்னணியை ஆராய்ந்து வருகின்றனர். நபரின் உள்நோக்கத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டும் விடுமுறையில் உள்ளன. எனவே, மிகக் குறைவான ஊழியர்களே பணிபுரிகின்றனர்" என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் கிழக்கு கேபிடல் தெரு மற்றும் 2வது தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாகன தடுப்பில் அதிகாலை 4 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. அமெரிக்கா முழுவதும் அரசு நிறுவனங்கள் மீது அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அரசு அலுவலகங்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்திருந்தது. ப்ளோரிடாவில் உள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு சொந்தமான எஸ்டேடில் புலன் விசாரணை அமைப்பான எஃப்பிஐ சோதனை நடத்தியதை தொடர்ந்து, தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், ஒரு சோதனைச் சாவடியில் ஒரு நபர் இரண்டு நாடாளுமன்ற காவல்துறை அலுவலர்களின் மீது வாகனத்தை ஓட்டிச் சென்று, 18 வயது படைவீரரைக் கொன்ற சம்பவத்தை இந்த தாக்குதல் நினைவூட்டுகிறது. குறிப்பாக, கடந்த 2021ஆம் ஆண்டு, அப்போது அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கும் விழாவை தடுக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அப்போதைய அதிபரான டிரம்பின் ஆதரவாளர்கள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்