கொந்தளிப்புக்கு மத்தியில்...இலங்கை திரும்பியுள்ள கோட்டபய ராஜபக்ச... கைது செய்யப்படுவாரா?
இலங்கையில் இருந்து வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை அன்று நாடு திரும்பி உள்ளார்.
இலங்கையில் இருந்து வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை அன்று நாடு திரும்பி உள்ளார். இதை அந்நாட்டின் விமான நிலைய அலுவலர் ஒருவர் உறுதி செய்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த இலங்கையில் இருந்து 7 வாரங்களுக்கு முன்பு கோட்டபய ராஜபக்ச வெளியேறினார்.
முக்கிய விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய கோட்டபய ராஜபக்சவை அமைச்சர்களும் அரசியல் தலைவர்களும் மலர் கொத்து வழங்கி வரவேற்றுள்ளனர். அவர் தற்போதும் இலங்கையில் செல்வாக்கு செலுத்தி வருவது இதன் மூலம் தெரிய வருகிறது. இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "விமானத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு மாலை அணிவிக்க அரசு தலைவர்களின் கூட்டம் அலைமோதியது" என்றார்.
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அவரைக் குற்றம் சாட்டி பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, மக்கள் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர். பின்னர், ஜூலையின் மத்தியில் இலங்கை ராணுவப் பாதுகாப்புடன் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
அவர் தாய்லாந்து செல்வதற்கு முன் சிங்கப்பூரில் இருந்து கொண்டு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். நாடு திரும்புவதற்கு தேவையானவற்றை செய்து தருமாறு புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
73 வயதான கோட்டபய ராஜபக்ச பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக வணிக விமானத்தில் இலங்கை வந்தார். தானாக முன்வந்து நாட்டு விட்டு வெளியேறிய அவர் தற்போது அந்த பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், "அவர் தாய்லாந்து ஹோட்டலில் கிட்டத்தட்ட கைதி போல வசித்து வருகிறார். மேலும் திரும்பி வர ஆர்வமாக இருந்தார்.
கோட்டபய நாடு திரும்பிய பிறகு அவரைப் பாதுகாக்க புதிய பாதுகாப்புப் பிரிவை உருவாக்கியுள்ளோம். இந்த பிரிவு இராணுவம் மற்றும் போலிஸ் கமாண்டோக்களின் கூறுகளை உள்ளடக்கியது" என்றார்.
ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பத்தை விக்ரமசிங்கே பாதுகாப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளன. இலங்கையின் அரசியலமைப்பு கோத்தபய மற்றும் அவரது மூத்த சகோதரரும் முன்னாள் அதிபருமான மஹிந்த உள்ளிட்ட முன்னாள் அதிபர்களுக்கு மெய்ப்பாதுகாவலர்கள், வாகனம் மற்றும் வீடுகளை உத்தரவாதப்படுத்துகிறது.
கோட்டாபய ராஜபக்சவின் ராஜினாமா, அதிபராக இருந்த போது அவர் அனுபவித்து வந்த அதிகாரங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு பிரபல பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையில் அவரது பங்கு உள்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை கைது செய்ய அழுத்தம் கொடுப்போம் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.