Hottest Month July: அடேங்கப்பா... 1.2 லட்சம் வருடங்களில் இல்லவே இல்லை...! வாட்டி வதைகும் ஜுலை வெயில்.. அதிர்ச்சி ரிப்போர்ட்
உலக அளவில் கடந்த 1.2 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக நடப்பாண்டு ஜுலை மாதம் பதிவாகும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.
உலக அளவில் கடந்த 1.2 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக நடப்பாண்டு ஜுலை மாதம் பதிவாகும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.
வரலாற்றில் மிகவும் வெப்பமான ஜுலை மாதம்:
காலநிலை மாற்றம் காரணமாக உலக வெப்பமயமாதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணமாக தான், வழக்கமாக மழைகாலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை தமிழ்நாட்டிலேயே நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த அளவிற்கு சர்வதேச அளவில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், உலக அளவில் கடந்த 1.2 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக நடப்பாண்டு ஜுலை மாதம் பதிவாகும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாடு மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் புவி வெப்பமயமாதலுக்கு முன்பு இருந்த வெப்பத்தை விட, நடப்பாண்டு ஜுலை மாதத்தில் சராசரியாக 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன், 120,000 ஆண்டுகளில் மிக வெப்பமான மாதமாக இருக்கும். ஜூலை 2023 இல், உலகம் தொடர்ந்து 23 நாட்கள் சர்வதேச அளவில் முந்தைய பதிவு மற்றும் எண்ணிக்கையை விட அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகரித்த வெப்பநிலை:
பகுப்பாய்வுகளின் அடிப்படையில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலை என்பது, தற்போது வரையிலான வெப்பமான ஜூலை மாதத்தை விட கணிசமான வித்தியாசத்தில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரையில் கடந்த 2019ம் ஆண்டு ஜுலை மாதம் தான், மிகவும் வெப்பமான ஜுலை மாதமாக உள்ளது. அதோடு, ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜுலை மாதம் 0.2 ° C (+/- 0.1 ° C) க்கும் அதிகமாக இருக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், வரலாற்றில் மிகவும் வெப்பமான ஜுலை மாதமாக நடப்பாண்டு ஜுலை மாதம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டு ஜூலை மாதத்தின் வெப்பநிலை என்பது, மனிதன் எரிபொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பு இருந்த சராசரி வெப்பநிலையை காட்டிலும், 1.3 முதல் 1.7°C வரை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் வெப்பமான மாதம்:
இந்த மாதத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வரலாறு காணாத அளவிலான கனமழை மற்றும் பெருவெள்ளம் பதிவாகியுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளிலும் அதிகப்படியான பருவமழை கொட்டி தீர்த்ததல் சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தன. இறப்பு எண்ணிக்கை தற்போது 100ஐ தாண்டியுள்ளது . யமுனை நதி அதன் உச்ச நிலையை எட்டியது, அதே சமயம் டெல்லியைச் சுற்றியுள்ள வரலாறு காணாத வெள்ளம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, அண்டார்டிகாவில் பனி உருகுவது என்பது வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அப்படி இருப்பினும், மிகவும் வெப்பமான ஜுலை மாதம் என்பது மட்டுமின்றி, உலகின் மிகவும் வெப்பமான மாதம் என்ற மோசமான சாதனையும் நடப்பாண்டு படைக்கப்பட உள்ளது. 1850ம் ஆண்டிற்குப் பிறகு சராசரி வெப்பநிலை என்பது சர்வதேச அளவில் 1.2°C அளவிற்கு உயர்ந்துள்ளது.
மோசமான நிலையில் உலகம்:
சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய வெப்பநிலை வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வரும் நிலையில், உலகம் லா நினா (குளிர்ச்சி) சுழற்சியில் இருந்ததால் அதன் தாக்கம் ஓரளவு அடக்கப்பட்டது. ஆனால், உலகம் தற்போது எல் நினோ (வெப்பமடைதல்) சுழற்சியில் நுழைவது போல் தெரிகிறது. இதனால் புவி வெப்பமடைதல் புதிய உச்சத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, அரசாங்கங்களின் தற்போது பின்பற்றப்படும் கொள்கைகளால் உலகின் வெப்பநிலை என்பது, தொழில்துறக்கு முன்பு இருந்த வெப்பநிலையை காட்டிலும் 2.8°C அதிகரிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
உணவு சங்கிலி பாதிப்பு:
காலநிலைப் பேரழிவுகளால் நேரடியாகப் பாதிக்கப்படாத நாடுகள் அதன் விளைவுகளை 2023-ன் பிற்பகுதியில் உணரக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். காலநிலை பாதிக்கப்படக்கூடிய நாடுகள் மற்றும் பயிர் உற்பத்தி செய்யும் பகுதிகளின் அறுவடைகள் கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சோயாபீன் மற்றும் அரிசி போன்றவற்றின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக மழை காரணமாக இந்திய அரசாங்கம் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அரிசி விலை உயர்வு ஏற்பட்டுள்ளதோடு, தட்டுப்பாடும் நிகழ்ந்துள்ளது.
”வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம்”
இதுதொடர்பாக பேசியுள்ள லீப்ஜிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளரான Dr Karsten Haustein, ”தற்போது ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை மாற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் கடல் மற்றும் நிலப்பரப்பில் வெப்ப அலைகளை தூண்டுகின்றன. உலகெங்கிலும் வெப்பநிலை உச்சநிலையை பதிவு செய்யும் அபாயத்தை அதிகரிக்கும். கடந்த சில வாரங்களில் சீனா, தெற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகள் அனைத்துன்மே புதிய உச்சம் அல்லது புதிய உச்சத்திற்கு நெருக்கமான அளவிலான அதிகப்படியான வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலும் அதே நிலையில் தான் உள்ளது. முரண்பாடாக, சில பகுதிகளில் மாறுபட்ட சூழலும் நிலவுகிறது. வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மாதத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மற்ற பெரும்பாலான மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் சராசரியை காட்டிலும் அதிகப்படியான வெப்பநிலையே நிலவியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார் இதேபோன்று பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் காலநிலை வெப்பம் தொடர்பாக எச்சரித்துள்ளனர்.
என்ன செய்யலாம்?
வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் வெளியேற்றம் 2025ம் ஆண்டிற்கு முன் உச்சத்தை எட்ட வேண்டும். 2030ம் ஆண்டிற்குள் 43% அளவிற்கு குறைக்கப்பட வேண்டும் என, காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச குழு அறிவுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், அடுத்தடுத்து நடைபெற உள்ள சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கான பல்வேறு கடினமான இலக்குகளை நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.