எல்லாரும் 'குடிங்க' ப்ளீஸ்! இளைஞர்கள் இடையே மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் ஜப்பான்! என்ன காரணம்?
போட்டியாளர்கள் விளம்பரங்கள், பிராண்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட அதிநவீன திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வரி நிறுவனம் விரும்புகிறது.
குடிப்பழக்கம் என்பது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு. இதில் மாற்றுக்கருத்தே இல்லை என்பதால், தொடர்ந்து மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு நம் நாட்டு மக்களிடையே கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஜப்பான் அரசோ மதுவை ஊக்கப்படுத்தும் சில வேலைகளை செய்து வருகிறது.
தற்கால ஜப்பான் இளைஞர்களிடம் நிதானம் அதிகமாக இருப்பதாகவும், குடிப்பழக்கம் குறைவாக இருப்பதாகவும் சமீபத்தில் வந்துள்ள ஆய்வின் தகவல்களை அடுத்து, அவர்களை மாற்றுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் புதிய பிரச்சாரம் ஒன்றை தொடங்க இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்துள்ளன.
போட்டி அறிவிப்பு
தற்போதைய இளைய தலைமுறையினர், தங்கள் பெற்றோர்களை விட குறைவாக குடிக்கின்றனர் என்பதால், இது சாக் (அரிசியில் தயாரிக்கப்படும் ஒயின்) போன்ற பானங்களின் வரியை பாதித்துள்ளது. எனவே இந்த போக்கை மாற்றுவதற்கான யோசனைகளை கொண்டு வர தேசிய வரி நிறுவனம் ஒரு தேசிய அளவிலான போட்டியுடன் களமிறங்கியுள்ளது. போட்டியாளர்கள் விளம்பரங்கள், பிராண்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட அதிநவீன திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று வரி நிறுவனம் விரும்புகிறது.
விற்பனை குறைவு
கோவிட் தொற்றுநோய் மற்றும் குறைந்துவரும் மக்கள்தொகை ஆகியவற்றின் காரணமாக புதிதாக மது பழக்கத்தை தொடங்குவது மக்களிடையே குறைந்துள்ளது. அதுவே மது விற்பனையில் சரிவுக்கு வழிவகுத்ததாக போட்டியை நடத்தும் வரி நிறுவனம் கூறுகிறது. வரி நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள், 1995 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் மக்கள் குறைவாகக் குடித்துள்ளனர் என்றும், ஒரு வயது வந்தவர் ஆண்டுக்கு சராசரியாக 100 லிட்டர் (22 கேலன்) குடித்ததில் இருந்து, 75 லிட்டர் (16 கேலன்) ஆகக் குறைந்துள்ளது என்றும் கண்டறியப் பட்டுள்ளது.
வரி வருமானம்
மது மீதான வரிகளின் வரி வருவாயும் பல ஆண்டுகளாக குறைந்து வந்துள்ளது. தி ஜப்பான் டைம்ஸ் செய்தித்தாள் படி, மதுவால் வரும் வரை வருமானம் 1980 இல் மொத்த வருவாயில் 5% ஆக இருந்தது, ஆனால் 2020 இல் அது வெறும் 1.7% ஆக உள்ளது. ஜப்பானின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் (29%) 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மதுப்பழக்கம் குறைந்து வருவதால் வரி நிறுவனம் ஒரு போட்டியை கொண்டு வந்துள்ளது.
சேக் விவா போட்டி
"சேக் விவா!" என்று அழைக்கப்படும் இந்த பிரச்சாரம் குடிப்பழக்கத்தை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றவும், தொழில்துறையை மேம்படுத்தவும் புதிய திட்டங்களை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த போட்டியானது 20 முதல் 39 வயதுக்குட்பட்ட ஜப்பானியர்களுக்கு இடையே நடத்தப்படுகிறது. ஷோச்சு, விஸ்கி, பீர் அல்லது ஒயின் போன்றவற்றை தங்கள் சக வயது உடையோர்கள் இடையே அதிகம் குடிக்க வைப்பதற்காக புதிய யோசனைகளை பகிரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மது குடிக்கவைக்க திட்டங்கள்
ஜப்பானிய ஊடகங்கள், இந்த ஆரோக்கியமற்ற குடிப் பழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சி குறித்து விமர்சனம் செய்கின்றனர். போட்டியாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க செப்டம்பர் இறுதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. நவம்பரில் இறுதித் திட்டங்கள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் நிபுணர்களின் உதவியுடன் சிறந்த திட்டங்கள் உருவாக்கப்படும். ஜப்பானின் ஆல்கஹால் சந்தை சுருங்கி வருவதாகவும், பிறப்பு விகிதங்கள் குறைந்து வருவதோடு, நாட்டின் பழைய மக்கள்தொகை விவரங்களும் இதற்குப் பின்னால் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக இருப்பதாக பிரச்சாரத்தின் இணையதளம் கூறுகிறது.