ட்விட்டர் நிறுவனத்தின் பிரான்ஸ் தலைவர் டேமியன் வியல் பதவி விலகல்
ட்விட்டர் நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டுத் தலைவர் டேமியன் வியல் பதவி விலகியுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாகவே உறுதிப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் பிரான்ஸ் நாட்டுத் தலைவர் டேமியன் வியல் பதவி விலகியுள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாகவே உறுதிப்படுத்தியுள்ளார். 7 ஆண்டுகளாக ட்விட்டரில் வேலை பார்த்த அவர் தற்போது, இது முடிந்துவிட்டது என்று ட்வீட் செய்துவிட்டு பதவி விலகியுள்ளார். அதேபோல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியிலும் அவர் தனது விலகலை உறுதி செய்துள்ளார்.
இருப்பினும் தன் பதவி விலகலுக்கு இன்ன விஷயம் தான் காரணம் என்றெதுவும் அவர் சுட்டிக் காட்டவில்லை. அதேபோல் பிரான்ஸ் நாட்டில் ட்விட்டர் நிறுவனத்தின் சார்பில் எத்தனை ஊழியர்கள் இருந்தனர். எலான் மஸ்க் உரிமை ஏற்புக்கு முன்னர் எத்தனை பேர் இறந்தனர். அவர் வருகைக்கு முன்னர் ஊழியர்களின் எண்ணிக்கை என்னவென்றெல்லாம் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
C’est fini 🫡 Fierté, honneur et mission accomplie. Au revoir #twitterfrance 🇫🇷. Quelle aventure ! Quelle equipe ! Quelles rencontres ! Merci à tous pour ces 7 années incroyables et intenses💙. #workhardplayhard #OCaptainMyCaptain #LoveWhereYouWorked
— damien viel (@damienviel) November 20, 2022
உலகில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என கூறியிருந்தார். அதோடு ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்கினார். அதன் பங்குகளை வாங்கியதையடுத்து அவர் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக உள் நுழைந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி தன்வசப்படுத்தினார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். இதனைத் தொடர்ந்து ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ட்விட்டர் நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.
இப்படியாக மாஸ் லேஆஃப்களில் எலான் மஸ்க் ஈடுபட்டார். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளின் வரிசையில் ட்விட்டர் நிறுவனத்தை லாப பாதைக்கு மீட்டெடுக்க ஊழியர்கள் அதிக நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும். இதற்கு இசைவு தெரிவிப்பவர்கள் வியாழன் மாலைக்குள் ஒப்புதல் இமெயிலை அனுப்பலாம் விருப்பமில்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம் என்று கெடு விதித்திருந்தார்.இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் தமக்குக் கவலையில்லை. சிறந்த பணியாளர்கள் தன்னுடன் இருக்கின்றனர் என்று மஸ்க் ட்வீட் செய்தார்.