(Source: ECI/ABP News/ABP Majha)
இஸ்தான்புல் குண்டுவெடிப்புக்கு காரணம் சிரிய பெண்மணியா? வெளியான பகீர் தகவல்..!
இந்த குண்டுவெடிப்புக்கு, சிரிய பெண்மணி ஒருவர் காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி நாட்டின் பெரு நகரங்களில் ஒன்றாக இருப்பது இஸ்தான்புல். இங்கு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் நேற்று பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 6 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் 38 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் இஸ்தான்புல் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்வதற்கு முன்பு அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியில் தீப்பிழம்புகள் வெளியேறுவதை காணலாம். பலத்த சத்தம் கேட்கப்பட்டதையடுத்து மக்கள் திரும்பி ஓடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த பயங்கர வெடிப்பு, எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தெரியாமல் இருந்தது. தற்போது அதுகுறித்த பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு, சிரிய பெண்மணி ஒருவர் காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலை உறுதி செய்யும் வகையில், வெடிகுண்டு வைத்ததற்காக சிரியப் பெண்ணை கைது செய்ததாக துருக்கி போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். குர்திஷ் போராளிகளுக்காக வேலை செய்து வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
🇹🇷FLASH | Une explosion a eu lieu sur l’avenue Istiklal d’#Istanbul. Il y aurait de nombreux blessés.
— Cerfia (@CerfiaFR) November 13, 2022
pic.twitter.com/heLGMSl0eS
குண்டு வைத்த பெண்மணி சிரிய நாட்டை சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்ததாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கி மற்றும் மேற்குலக நாடுகளால் பயங்கரவாத குழு என அறிவிக்கப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்காக அவர் பணியாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.
புகழ்பெற்ற இஸ்திக்லால் ஷாப்பிங் தெருவில் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணி அளவில் இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தெருவில் கடைகள் மற்றும் உணவகங்கள் வரிசையாக காட்சியளிக்கின்றன. இது, சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பிரபலமாக இருப்பதால், பொதுவாக அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதுகுறித்து இஸ்தான்புல் ஆளுநர் அலி யெர்லிகாயா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "உயிர்சேதம். மக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு அருகில் அமைந்துள்ள காசிம்பாசா காவல் நிலைய அதிகாரிகள், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
2015 முதல் 2016 வரையில் இஸ்தான்புல்லை இலக்கு வைத்து ஐஎஸ் பயங்கரவாத குழுவால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின்போது இஸ்திக்லால் அவென்யூ பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு குறித்து செய்தி வெளியிட துருக்கியின் வானொலி மற்றும் தொலைக்காட்சி கவுன்சில் கட்டுபாடு விதித்துள்ளது.