Israels Iron Dome: ஏவுகணைகளுக்கு அஞ்சாத இஸ்ரேல், “அயர்ன் டோம்” என்றால் என்ன? வான் பாதுகாப்பில் அசத்துவது எப்படி?
Israels Iron Dome: உலகின் சிறந்த வான் பாதுகாப்பு கொண்ட நாடாக கருதப்படும் இஸ்ரேலின், அயர்ன் டோம் தொழில்நுட்பம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Israels Iron Dome: இஸ்ரேலின் அயர்ன் டோம் தொழில்நுட்பம் என்றால் என்ன? எவ்வாறு செயல்படுகிறது போன்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுளன.
போர் சூழலில் இஸ்ரேல்:
ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி போன்ற கிளர்ச்சியாளர்களை, இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக வேட்டையாடி வருகிறது. இதனிடையே, ஈரான் அண்மையில் நூற்றுக்கும் அதிகமான ஏவுகணகளை கொண்டு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவற்றை, தங்களது அயர்ன் டோம் தொழில்நுட்பம் கொண்டு இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இப்படி வலுவான வான் பாதுகாப்பை வழங்கி வரும் தொழில்நுட்ப உபகரணங்களின் தொகுப்பை தான், இரும்பு குவிமாடம் என பொருள்படும் வகையில் அயர்ன் டோம் என இஸ்ரேல் குறிப்பிடுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தான், உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அம்சம் கொண்ட நாடாக இஸ்ரேல் கருதப்படுகிறது. இந்த சூழலில் ”அயர்ன் டோம்” அமைப்பு என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
”அயர்ன் டோம்” என்றால் என்ன?
அயர்ன் டோம் என்பது ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட குறுகிய தூர மொபைல் வான் பாதுகாப்பு அமைப்பாகும், இவை இரண்டும் இஸ்ரேலிய அரசுக்கு சொந்தமானது. 2006ம் அண்டு வெடித்த லெபனான் உடனான போரின்போது, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவியது. அதன் விளைவாக தான் அயர்ன் டோம் அமைப்பு இஸ்ரேல் உருவாக்கியது. 2011 இல் செயல்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, முதன் முதலில் ஏப்ரல் 7, 2011 அன்று போரில் பயன்படுத்தப்பட்டது .
அயர்ன் டோம் இஸ்ரேலின் பல அடுக்கு ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாகும். ரஃபேல் உருவாக்கிய டேவிட் ஸ்லிங் மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய ஏரோ 2 மற்றும் 3 ஆகியவை கூடுதல் அடுக்குகளாக இஸ்ரேல் வான்பரப்பை பாதுகாத்து வருகின்றன. இந்த கூடுதல் அமைப்புகளானது நீண்ட தூர ரேஞ்ச் கொண்டவை. கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் போன்ற பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்டுள்ளன.
அயர்ன் டோம் 90 சதவிகித வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது என்று ரஃபேல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அமைபபை பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததில் இருந்து, 5,000 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை இடைமறித்துள்ளது. இந்த அமைப்பிற்கு அமெரிக்காவின் பேட்ரியாட் அமைப்பும் ஆதரவாக உள்ளது.
அயர்ன் டோம் சிஸ்டம் என்பது மூன்று கருவிகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். அளவில் சிறியது என்பதால் அதனை வேண்டிய இடத்திற்கு மிக எளிதாக கொண்டு செல்லலாம்.
அயர்ன் டோம் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை, மேலே இணைக்கப்பட்டுள்ள வீடியோ மூலம் தெளிவாக அறியலாம்.
அயர்ன் டோம் எப்படி வேலை செய்கிறது?
அயர்ன் டோம் அமைப்பு மூன்று அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி உள்வரும் வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், அவற்றின் தாக்கத்தின் சாத்தியமான புள்ளியின் மதிப்பீடு மற்றும் இடைமறிப்பு ஆகிய செயல்கள அந்த அமைப்பு முன்னெடுக்கிறது.
எதிரிகளால் ராக்கெட் ஏவப்படும்போது, ரேடார் அமைப்பு ஏவுகணையை கண்டறிந்து கண்காணிக்கும். கட்டுப்பாட்டு சிஸ்டமானது ஏவுகணை எங்கு தரையிறங்கும் என்பதை மதிப்பிடும் மற்றும் அது இடைமறிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும். அதனடிப்படையில் தேவைப்பட்டால், எதிரிகளின் ஏவுகணையை இடைமறிக்க புது ஏவுகணையைச் செலுத்தும். ஒரு ஏவுகணை எந்தத் தீங்கும் செய்ய முடியாத இடத்தில் தரையிறங்கும் என மதிப்பிடப்பட்டால், அது தரையிறங்க அனுமதிக்கப்படும்.
ரேடார் மற்றும் சென்சார் கவரேஜ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதன் மூலம், இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பல அடுக்கு அமைப்பானது அதிக எண்ணிக்கையிலான உள்வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள், கப்பல் ஏவுகணைகள் அல்லது விமானங்களை இடைமறிக்க சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

