"காசா மீது அணுகுண்டை வீசுவோம்" இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அலறவிட்ட அமைச்சர்
இஸ்ரேல் போரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்த செல்ல முனைப்பு காட்டி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவே, இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன பகுதியான காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 9,480க்கும் மேற்பட்ட பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவர். மருத்துவமனை, அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மனிதத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது.
இஸ்ரேல் மீது சுமத்தப்படும் போர் குற்றங்கள்:
போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் அவசர உதவிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன. போர் குற்றத்தில் ஈடுபடுவதாக இஸ்ரேல் மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், காசா மீது அணுகுண்டை வீசுவோம் என தீவிர வலதுசாரியும் இஸ்ரேல் அமைச்சருமான அமிஹாய் எலியாஹு தெரிவித்திருப்பது உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேடியோ கோல் பிரமா என்ற இஸ்ரேலிய ரேடியோ ஸ்டேசனுக்கு நேர்காணல் அளிக்கையில், காசா மீது அணுகுண்டு வீசப்படுமா என கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "அதற்கும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது" என கூறினார். அதுமட்டும் இன்றி, காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செய்யக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். "நாஜிகளுக்கு மனிதாபிமான உதவியை வழங்க விட மாட்டோம். காசாவில் மற்றவர்களை உணர்வுப்பூர்வமாக மதிக்கும் அப்பாவிகளே கிடையாது" என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பதற்றத்தை உண்டாக்கிய இஸ்ரேல் அமைச்சர்:
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவே, அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டு வரும் சூழலில் அண்குண்டை வீசினால் அது ஒட்டுமொத்த காசாவையும் உருகுலைத்துவிடும். இஸ்ரேல் போரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்த செல்ல முனைப்பு காட்டி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவே, இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, அமைச்சரவையில் இருந்து அமிஹாய் எலியாஹு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "அமைச்சரின் கருத்து யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக சர்வதேச சட்டத்தின் மிக உயர்ந்த தரத்தின்படி செயல்படுகின்றன. வெற்றி கிடைக்கும் வரை நாங்கள் அதைத் தொடருவோம்" என்றார்.
இதற்கிடையே, தன்னுடைய சர்ச்சை கருத்துகளுக்கு விளக்கம் அளித்துள்ள அமிஹாய் எலியாஹு, "அணுகுண்டு பற்றிய எனது கருத்து உருவகமாக பயன்படுத்தினேன் என்பது உணர்வுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இருப்பினும், பயங்கரவாதத்திற்கு வலுவான, சமமற்ற பதில் நிச்சயமாக தேவைப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு மதிப்பில்லை என்பது இதன் மூலம் நாஜிக்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் தெளிவுப்படுத்தப்படும்" என்றார்.