Israel - Hamas War: மருத்துவமனை மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்; இது போர்குற்றம் - உலக நாடுகள் கடும் கண்டனம்
Israel - Hamas War: காஸா மருத்துவமனை மீதான தாக்குதல் மூலம் இனப்படுகொலை நடத்தப்பட்டு வருவதாக, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Israel - Hamas War: காஸா நகரில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
500 பேர் உயிரிழப்பு:
காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் 12வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தெற்கு காஸா பகுதியில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது நேற்று நள்ளிரவில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் சிறுவர்கள் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை எனவும், ஹமாஸ் அமைப்பு தான் தவறுதலாக தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, இந்த தாக்குலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
பாலஸ்தீனம்:
மருத்துவமனை மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பேசிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர், "இது ஒரு இனப்படுகொலை மற்றும் "மனிதாபிமான பேரழிவு" என்று கண்டித்தார். தாக்குதல் சம்பவத்த தொடர்ந்து அமெரிக்க அதிபர் புதின் உடனான சந்திப்பை பாலஸ்தீன அதிபர் ரத்து செய்துள்ளார்.
ஜோர்டான்:
”இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டிப்பதோடு, பாலஸ்தீனிய மக்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சண்டையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” என ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸா மருத்துவமனை மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு "படுகொலை" மற்றும் "போர்க் குற்றம்", இதில் மவுனம் காக்க முடியாது என்றும் ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
எகிப்து:
மருத்துவமனை மீதான தாக்குதலை கடுமையாக கண்டித்ததோடு, காஸாவ்ல் போர் விதி மீறல்களைத் தடுக்க சர்வதேச சமூகம் தலைய்ட வேண்டும் எனவும் எகிப்து அரசு வலியுறுத்தியுள்ளது.
கத்தார்:
காஸா பகுதியில் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மக்கள் தங்கியுள்ள முகாம்கள் உள்ளடக்கிய பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்கள் விரிவடைவது ஆபத்தை அதிகரிக்கிறது, என கத்தார் அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
கனடா:
”காஸாவில் இருந்து வெளிவரும் செய்திகள் பயங்கரமானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சர்வதேச சட்டம் இதிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் மதிக்கப்பட வேண்டும். போர்களைச் சுற்றி விதிகள் உள்ளன. மருத்துவமனையைத் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது, ”என்று கனடா பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
ஈரான்
மருத்துவமனை மீதானவான்வழித் தாக்குதல் "நிராயுதபாணி மற்றும் பாதுகாப்பற்ற மக்கள்" மீதான தாக்குதல் என ஈரான் அரசு கண்டித்துள்ளது.
துருக்கி:
"பெண்கள், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அடங்கிய மருத்துவமனையைத் தாக்குவது, மிக அடிப்படையான மனித விழுமியங்கள் அற்ற இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு சமீபத்திய உதாரணம். காஸாவில் முன்னெப்போதும் இல்லாத இந்த கொடூரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க அனைத்து மனித இனத்தையும் நான் அழைக்கிறேன்" என துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. சபை:
”காஸாவில் மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியை தருகிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என ஐக்கிய நாடுகள் சபை தலைவர் ஆண்டனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா
”மருத்துவமனை மீதான தாக்குதல் என்பது ஒரு போர்க்குற்றம். பல்வேறு நாடுகளில் மற்றும் பல்வேறு கண்டங்களில் நடக்கும் போர்களில் இழிந்த முறையில் பணம் சம்பாதிப்பவர்களிடமே இறுதிப் பொறுப்பு உள்ளது. அந்த வகையில் காஸா தாக்குதலுக்கும் அமெரிக்காவே பொறுப்பு” என ரஷ்ய அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதேபோன்று ஆப்ரிக்கா யூனியன், அமெரிக்க யூனியன், அரபு லீக், உலக சுகாதார அமைப்பு மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளன.