USA H1B Visa: “AI டெக் வேணும்னா, USA-ல இந்தியர்கள் இருக்கணும்” கட்டணத்தை குறைங்க - ட்ரம்பிற்கு வார்னிங்
USA H1B Visa AI: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இந்தியர்கள் முக்கிய பங்களிப்பார்கள் என, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

USA H1B Visa AI: H1B விசா மீது விதிக்கப்பட்டுள்ள 88 லட்ச ரூபாய் என்ற புதிய கட்டணத்தை குறைக்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பிற்கு கோரிக்கை
அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் குழு (LawMakers), அதிபர் டொனால்ட் ட்ரம்ப் H-1B விசாக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். புதிய ரூ.88 லட்சம் கட்டணம் மற்றும் பிற கட்டுப்பாடுகள் அமெரிக்காவின் AI தொழில்நுட்ப தலைமையையும், இந்தியாவுடனான அதன் கூட்டாண்மையையும் சேதப்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. பல பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்ட அந்த கடிதம், "சில குடியுரிமை இல்லாத தொழிலாளர்களின் நுழைவு மீதான கட்டுப்பாடு" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
ட்ரம்பிற்கு வார்னிங்:
கடிதத்தில், “ட்ரம்பின் நிர்வாகம் விடுத்துள்ள புதிய கட்டுப்பாடுகள் உயர் திறன் கொண்ட திறமையாளர்களை, குறிப்பாக கடந்த ஆண்டு அனைத்து H-1B விசா வைத்திருப்பவர்களில் 71 சதவீதமாக இருந்த இந்தியாவைச் சேர்ந்தவர்களை, ஊக்கப்படுத்தாது. H-1B விசா பெறுபவர்களில் மிகப்பெரிய பங்கை வகிக்கும் இந்தியர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவில் அமெரிக்க தலைமையாக விளங்க முக்கியமானவர்களாக திகழ்கின்றனர். சீனா AI மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் தீவிரமாக முதலீடு செய்யும் நேரத்தில், உலகின் சிறந்த திறமையாளர்களை நாம் தொடர்ந்து ஈர்க்க வேண்டும்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் H-1B விசா திட்டம், அமெரிக்க போட்டித்தன்மையின் மூலக்கல்லாக உள்ளது. இந்த திட்டமானது அமெரிக்கர்களின் வேலையை பறிப்பதை காட்டிலும் நமக்கான புதுமை, காப்புரிமை உற்பத்தி மற்றும் வணிக உருவாக்கத்தை மேம்படுத்துவதாக உள்ளது” எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
”AI டெக் - இந்தியர்கள் அவசியம்”
விசா திட்டத்தின் மதிப்பு தொழிலாளர் தேவைகளுக்கு அப்பாற்பட்டது என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜிம்மி பனெட்டா வலியுறுத்தினார். அதன்படி, "தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில் இருப்பதில் H-1B விசா திட்டம் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய கூர்மையான எழுச்சியுடன் இப்போது முன்னெப்போதையும் விட இது தேவைப்படுகிறது. புதிய கட்டணம் பெரிய நிறுவனங்களுக்கான அணுகலை மட்டுமே கட்டுப்படுத்தும். உலகளாவிய நிபுணத்துவத்தை நம்பியிருக்கும் அமெரிக்காவின் ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்தத் திட்டம் அதிக அளவில் பணம் செலுத்தக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், மேம்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும்" என்று பனெட்டா மேலும் கூறினார்.
இந்தியாவின் கூட்டணி அவசியம்
"இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தத் திறமையாளர்களை ஈர்ப்பது ஒரு முக்கிய ஜனநாயக கூட்டாளியுடனான எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்துகிறது. இந்திய-அமெரிக்கர்களும் பிற H-1B வைத்திருப்பவர்களும் உள்ளூர் பொருளாதாரங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் குடிமை வாழ்க்கையை மேம்படுத்துகிறார்கள். H-1B திட்டத்திற்கான அணுகலைப் பாதுகாப்பது என்பது வெறுமனே வேலைகளை நிரப்புவது பற்றியது அல்ல. இது 21 ஆம் நூற்றாண்டில் உலகளாவிய சக்தியை வரையறுக்கும் தொழில்களில் அமெரிக்கத் தலைமையைப் பாதுகாப்பது பற்றியது” என சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் கடிதத்தில் ட்ரம்பிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















