Crime : இனவெறி...பாலின பாகுபாடு...அமெரிக்க கல்லூரியில் அதிர்ச்சி... சட்ட போராட்டத்தில் இறங்கிய இந்திய வம்சாவளி பேராசிரியை..!
தான் இன மற்றும் பாலின பாகுபாடுக்கு உள்ளானதாக கல்லூரி நிர்வாகம் மீது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
வெளிநாடுகளில், இந்தியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அங்கும் இங்குமாய் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக, இன வெறி தாக்குதல் நடந்து வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. சமீபத்தில், கூட, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது காலிஸ்தானி ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி:
இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மாசசூசெட்ஸில் உள்ள வெல்லஸ்லி வணிகப் பள்ளியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர், தான் இன மற்றும் பாலின பாகுபாடுக்கு உள்ளானதாக கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
இதையடுத்து, கல்லூரிக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் பெயர் லட்சுமி பாலச்சந்திரா. இவர், பாப்சன் கல்லூரியின் தொழில்முனைவோர் துறை இணைப் பேராசிரியராக உள்ளார்.
தவறான நடத்தை மற்றும் கல்லூரி நிர்வாகிகள் தனது பிரச்னைகளை விசாரிக்கத் தவறியதால், தொழில் வாய்ப்புகளை இழந்ததாகவும், பொருளாதார இழப்புகளை சந்தித்ததாகவும் மன உளைச்சல் மற்றும் தன்னுடைய நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் குற்றம் சாட்டினார்.
சக பேராசிரியர் செய்த காரியம்:
கடந்த 2012ஆம் ஆண்டு, பாப்சனின் ஆசிரியப் பணியில் லட்சுமி பாலச்சந்திரா சேர்ந்தார். 2019ஆம் ஆண்டு, அவருக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது.
தான் எதிர்கொண்ட மோசமான அனுபவங்கள் குறித்து பட்டியலிட்டுள்ள லட்சுமி பாலசந்திரா, "கல்லூரியில் பாரபட்சமான பணிச்சூழலை ஏற்படுத்திய முதன்மை குற்றவாளி கல்லூரியின் தொழில்முனைவோர் பிரிவின் பேராசிரியரும் முன்னாள் தலைவருமான ஆண்ட்ரூ கார்பெட்.
வகுப்பை ஒதுக்கும் பொறுப்பு, வகுப்பின் நேரத்தை உறுதி செய்தல், வருடாந்திர மதிப்பாய்வு ஆகிய பொறுப்புகள் கார்பெட்டிமே அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அவர் என்னை விருப்பத்தேர்வு பாடங்களை கற்பிக்க மட்டுமே அனுமதித்தார். பல்வேறு கோரிக்கைகள் விடுத்தபோதிலும், தொழில்முனைவோர் துறையின் முக்கிய பாட பிரிவை எடுக்க அனுமதிக்கவில்லை.
கல்லூரி நிர்வாகம் மீது சரமாரி குற்றச்சாட்டு:
எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் ஆகியவற்றில் பாடம் எடுத்திருந்தபோதிலும், என்னை முக்கிய பாடம் எடுக்க அனுமதிக்கவில்லை.
வெள்ளை மற்றும் ஆண் ஆசிரியர்களுக்கு மட்டுமே கார்பெட் ஆதரவாக இருக்கிறார். மேலும், அவருகளுக்கு மட்டுமே விருதுகளையும் சலுகைகளையும் ஒதுக்குகிறார்" என கூறியுள்ளார்.
இதுகுறித்து லட்சுமி பாலசந்திரா அளித்த புகாரில், "எனக்கு பல தலைமைப் பதவிகள் மறுக்கப்பட்டது. ஆராய்ச்சி நடத்துவதற்கும் ஆய்வு கட்டுரைகளை எழுதுவதற்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதுபோன்ற சலுகைகள் தொழில்முனைவோர் பிரிவில் உள்ள வெள்ளை ஆண் ஆசிரியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படுகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என லட்சுமி பாலசந்திரா கூறியுள்ளார்.
இதையும் படிக்க: Crime : கொலை செய்யப்பட்ட 1000 நாய்கள்...பட்டினி போட்டு கொன்ற கொடூரம்...முதியவர் செய்த அதிர்ச்சி காரியம்..!