India Vs US: நண்பன் நண்பன்தான்யா.. வரியை தவிர்க்க அமெரிக்காவுடன் முதல் ஆளாக இந்தியா ஒப்பந்தம்...
என்ன இருந்தாலும் நண்பன் நண்பன்தான் என்று கூறும் அளவிற்கு, அமெரிக்காவுடன் முதல் நாடாக இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரஸ்பர வரிகளை விதித்த நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அந்த ரேஸில் முந்தியிருப்பது இந்தியா தான். ஆம், முதல் ஆளாக இந்தியாதான் அமெரிக்காவுடன் வரியை தவிர்க்கும் வகையில், வர்த்தக ஒப்பந்தம் போட உள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். அதில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.
ட்ரம்ப்பின் வரியை எதிர்த்து தொடர்ந்து பதில் வரி விதித்த சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் வர்த்தகப் போர் ஏற்பட்டு உச்ச கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், சீனாவை தவிர்த்து பிற நாடுகளுக்கான பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ள அமெரிக்கா, அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதிலும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த வர்த்தகப் போர் எப்போது முடிவுக்கு வரும் என அனைத்து நாடுகளும் எதிர்பார்த்து காத்துள்ளன. இந்நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா நடத்திவரும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கருவூலச் செயலாளர் கூறியது என்ன.?
அமெரிக்காவின் பரஸ்பர வரியை தவிர்க்கும் வகையில், சீனா தவிர்த்து அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் போடுவதில் மும்முரம் காட்டி வரும் நிலையில், இந்தியா உடனான பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளதாக, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.
இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்காக இந்தியா உடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளதாகவும், இந்தியாவின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வர்த்தக நடைமுறைகளே அதற்கு காரணம் என்றும் ஸ்காட் பெசன்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா, குறைவான கட்டணமில்லாத வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளது என்றும், நாணயக் கையாளுதல் இல்லை என்றும், மிக மிகக் குறைந்த அரசாங்க மானியங்களை கொண்டுள்ளதால், இந்தியர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது மிகவும் எளிதாக இருப்பதாக ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.
தற்போது, இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட 26% வரி, 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 90 நாட்கள் ஜூலை 8-ம் தேதி நிறைவடைகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே இந்தியா-அமெரிக்கா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என நம்பப்படுகிறது. எனினும், அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையின்படி, மற்ற நாடுகளைப்போல், இந்தியாவிற்கும் 10% வரி விதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




















