இலங்கை விமானப்படைக்கு டார்னியர் விமானத்தை வழங்கும் இந்தியா.. என்ன பலன்கள்?
டார்னியர் வகை விமானம் கடற் பகுதிகளை கண்காணிக்கவும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது
இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட முதல் விமானமானது இலங்கை விமானப்படையில் ஆகஸ்ட் 15-ம் தேதி இணைக்கப்பட இருக்கிறது.
இதன்மூலம் இலங்கையின் கடற் பகுதிகளை கண்காணிக்கவும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த டார்னியர் 228 விமானம் பயன்படும். இந்த விமானம் இந்திய கடற்படையிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்பட உள்ள புது விமானமாகும்
இலங்கை அரசு தன்னுடைய விமானப்படையை மேம்படுத்துவதற்காக உளவு பணிகளுக்கு என இந்திய அரசிடம் இருந்து இரண்டு டார்னியர் 228 விமானங்களை 2018 ஜனவரியில் கேட்டிருந்தது. இந்த விமானங்களை தயாரித்து கொடுப்பதற்கு காலதாமதமாகும் என்பதனால் தற்சமயம் இந்திய கப்பற்படையில் இருக்கும் புது டார்னியர் 228 விமானத்தை விலை இல்லாமல் இலவசமாக தர இந்தியா சம்மதித்திருக்கிறது.
இது 17 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது குறுகிய தூரத்தில் ஓடி மேலே எழும்பவும் ,குறுகிய தூரத்தில் கீழிறங்கவும் வசதி கொண்டது. கரடுமுரடான ஓடுதளத்திலும் கீழ் இறங்கி மேல் எழும்பும் வசதியைக் கொண்டது. இந்த விமானத்தின் மற்றும் ஒரு சிறப்பு என்னவெனில் வெப்பமான கால நிலையிலும் கூட செயல்படும் திறன் கொண்டது. இந்தியாவின் கான்பூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மூலம் தயாரிக்கப்படும் இத்தகைய விமானங்கள் இந்தியாவின் கடலோர காவல் படை இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படையின் பயன்பாட்டில் இருக்கிறது.
ராணுவ பயன்பாட்டிற்கென இந்த விமானத்தில் நிறுவப்படும் சிறப்பு கருவிகளின் மூலம் 360-டிகிரி கண்காணிப்பு ரேடார் , பக்கவாட்டில் காணப்படும் வான்வழி ரேடார்,முன்னோக்கி பார்க்கும் அகச்சிவப்பு சென்சார், சர்ச் லைட் , ஆபரேட்டர் ஸ்டேஷன், நிகழ்நேர டேட்டாலிங்க் , பெரிதாக்கப்பட்ட எரிபொருள் தொட்டிகள், செயற்கைக்கோள் அப்லிங்க், ஸ்ட்ரெச்கள், ஏர்-திறக்கக்கூடிய ரோலர் கதவு மற்றும் அகச்சிவப்பு / புற ஊதா சென்சார்கள் என இத்தகைய வசதிகள் ராணுவ விமானங்களில் நிறுவப்பட்டிருக்கும்.
மேலும் இதில் ஆட்டோமேட்டிக் பைலட்டிங் வசதியும் உள்ளது. இது இரண்டு விமானிகள் கொண்டு இயக்கும் விமானமாக வடிவமைக்கப்பட்ட போதிலும் கூட, ஒரு விமானியை வைத்து மட்டுமே இந்த விமானத்தை இயக்க முடியும் என்பது இதில் உள்ள சிறப்பு அம்சமாகும். மேலும் வழிசெலுத்தும் அமைப்பு,தூரத்தை அளவிடும் கருவி, தானியங்கி திசை கண்டுபிடிப்பான், ரேடார் அல்டிமீட்டர், குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS), ஏர் டேட்டா கம்ப்யூட்டர் மற்றும் ஒரு விமான மேலாண்மை அமைப்பு . வானிலை ரேடார் மற்றும் உயர் அதிர்வெண் ரேடியோ போன்ற கூடுதல் சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது. இதைப் போன்று ராணுவ பயன்பாட்டிற்கும் மட்டுமில்லாமல் இது போக்குவரத்துக்கும் பயன்படுகிறது.
இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட இந்த விமானம் அசாமின் திப்ருகர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் இடையே பொது பயன்பாட்டிற்காக பயணிகள் விமானமாக இயங்குகிறது. இதனை அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்குகிறது.
இரட்டை எஞ்சினுடன் கூடிய இலகுரக போக்குவரத்து விமானமான இதில ஐந்து-பிளேடட் கொண்டு வடிவமைக்கப்பட்ட ப்ரொப்பல்லர்களுடன்,பத்து மணி நேர விமானத் தாங்கும் திறன் கொண்டது. மேலும் பரந்த இயக்க வரம்பு, குறைந்த செயல்பாட்டு செலவு மற்றும் பல்வேறு காரணமாக இந்த வகை பயனுள்ளதாக இருக்கிறது. இது 1981 ஆம் ஆண்டு முதன் முதலாக தயாரிக்கப்பட்டது.
இந்திய விமானப்படையின் மேற்பார்வையுடன் பயிற்சி பெறும் 15 விமான ஊழியர்களைக் கொண்டு இந்த விமானம் இலங்கை விமானப்படையில் பணியாற்ற இருக்கிறது. இந்த விமான குழுவினர் இந்தியாவில் நான்கு மாத கால பயிற்சியை முடித்து இருக்கிறார்கள்.
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த விமானத்தை ஒப்படைப்பார் .அதன் பிறகு அன்றைய தினமே இது இலங்கையின் விமானப்படையில் சேர்க்கப்படுகிறது .
சீன ஆய்வு கப்பல் இலங்கையை துறைமுகத்திற்கு வரும் நிலையில், இந்தியாவால் கடல்சார் பாதுகாப்பிற்கான டார்னியர் விமானம் இலங்கைக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது கடல்சார் கண்காணிப்பு விமானம் என்பதால் சீன உளவு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அதன் நடவடிக்கைகளை கூட இது கண்காணிக்கலாம் என கூறப்படுகிறது