இந்தியா வருவதற்கு திட்டமிட்டிருந்த கோட்டபய... உதவி செய்ய மறுத்த இந்தியா...திடுக் தகவல்
இலங்கையின் ஏ என் 32 விமானம் மூலம் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச இந்திய விமான நிலையத்தில் இறங்குவதற்கு விடுத்த வேண்டுகோளை இந்தியா மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கையின் ஏ என் 32 விமானம் மூலம் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச இந்திய விமான நிலையத்தில் இறங்குவதற்கு விடுத்த வேண்டுகோளை இந்தியா மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் அமெரிக்காவுக்கான விசாவும் இலங்கை அதிபருக்கு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கோட்டபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்பட 15 பேர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் நடைமுறை சிக்கல் காரணமாக தோல்வி அடைந்ததாக விமானப்படை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
Maldives is not GR's final destination. He is expected to reach his final destination later today evening and only then is the resignation likely to be announced by the Speaker of Parliament. A third party will deliver the letter to the Speaker - sources#SriLanka
— Jamila Husain (@Jamz5251) July 13, 2022
கடந்த 9ஆம் தேதி முதல் கோட்டபய ராஜபக்ச உள்ளிட்ட 15 பேர் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாகவும், ஆனால் விமான நிலையம் மூலம் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒன்பதாம் தேதி முதலே முக்கிய பிரமுகர்கள் வெளியேறும் வரிசையில், குடிவரவு அதிகாரிகள் பணியாற்ற மறுத்துவிட்டதாகவே அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இலங்கையில் இருந்து வெளியேற அதிபர் கோட்டபய எடுத்த அனைத்து முயற்சிகளும் இறுதி நேரத்தில் தோல்வி அடைந்ததாகவே கூறப்படுகிறது. ஒன்பதாம் தேதி அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோட்டபய ராஜபக்ச வழக்கம்போல் திருகோணமலை கடற்படை தளத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்.
அதன் பின்னர் கொழும்பு ரத்மலானை விமான நிலையத்திற்கு திங்கள்கிழமை ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதாக சொல்லப்படுகிறது. அங்கு அவர் முப்படை தளபதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர், பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். விமான நிலையம் ஊடாக ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான மூலம் துபாய்க்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் பண்டாரநாயக்க விமான நிலையத்தின், குடிவரவு பிரிவிற்கு தங்களது ஆவணங்களை சரி பார்ப்பதற்காக வந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் சிலர் உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் செல்வதற்கான வழி மூடப்பட்டதால், பொதுமக்களுக்கான பகுதியில் செல்ல முயன்ற போது அவர்களின் பாதுகாப்பு கருதி, அங்கிருந்த பாதுகாப்பு தரப்பினர் அதிபர் கோட்டபாய ராஜபக்சவையும், அவரது குடும்பத்தினரையும் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்பின்னர் அதிபரும் அவரது குழுவை சேர்ந்த 15 பேரும், எத்திஹாட் ஈவை 267 விமானத்தில் ஏற முயன்றதாகவும், பின்னர் அது தொழில் நுட்ப காரணங்களால் அதை தவறவிட்டதாகவும் விமான நிலைய வட்டாரம் தெரிவிக்கிறது.
இதன் பின்னர் தான் இலங்கையின் ஏஎன் 32 விமானம் மூலம் இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச இந்திய விமான நிலையம் ஒன்றில் இறங்குவதற்கு விடுத்த வேண்டுகோளை இந்தியா மறுத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அடுத்து கொழும்பு விமான நிலையம் அருகில் உள்ள விமானப்படை தளத்தில் இரவு தங்கி இருந்த அதிபர் கோட்டபய ராஜபக்ச, நாட்டை விட்டு எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுவது என ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த சிலர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனை அடுத்து அமெரிக்காவுக்கான நுழைவு விசாவும் அவருக்கு மறுக்கப்பட்டு இருக்கிறது. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான குடியுரிமை வேண்டாம் எனக்கூறி ரத்து செய்த கோட்டபாய ராஜபக்ச இலங்கையிலேயே இருந்தார்.
இதன் பின்னர் கடந்த வாரம், இலங்கையில் மக்கள் போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து, கோட்டபாய ராஜபக்ச அமெரிக்கா செல்வதற்காக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் விசா கோரியதாக தெரிய வருகிறது. அதிபரின் அந்த வேண்டுகோளை அமெரிக்க தூதரகம் மறுத்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க குடியுரிமையை வைத்திருந்த கோட்டபய ராஜபக்ச இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த நாட்டு குடியுரிமையை கைவிட்டு இலங்கைக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே குடியுரிமையை துறந்த ஒருவருக்கு விருந்தினர் விசாவை உடனடியாக வழங்க முடியாது என அமெரிக்க தூதரகம் கோட்டபாய ராஜபக்சவிடம் தெரிவித்ததாக சிங்கள ஊடகம் செய்து வெளியிட்டு இருக்கிறது.
கோட்டபய ராஜபக்ச ஒரு நாட்டின் அதிபராக விசா இன்றி செல்ல முடியும் என்ற ஒரு நடைமுறை இருக்கிறது. இருந்தபோதும் இலங்கையின் தற்போதைய சூழ்நிலைகள் அதற்கு இடம் கொடுக்காத காரணத்தால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ள நிலையில் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டதாகவே சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து தற்போது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் தலைவர்கள் அஜித் நிவார்ட் கப்ரால், டபிள்யூ. டி. லக்சுமன் மற்றும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகல ஆகியோர் முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.