கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய நாடுகளின் உறவு: ஒரு அலசல்
கோவிட் காலத்தில் இந்திய - ஆஸ்திரேலிய உறவு - இனப்பாகுபாடு, காலனியாதிக்கம், புவி அரசியல் எப்படி செயல்படுகிறது?
கட்டுரையாளர் வினய் லால், கோவிட் 19 தொற்றுக்காலத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா உறவு தொடர்பாக எழுதியிருக்கும் கட்டுரை இது. இதில் இந்த இரு நாடுகள் இடையே, இனப்பாகுபாடு, காலனியாதிக்கம் ஆகிய சூழலும், அதில் உறவு எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். அதில், "ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா என்றால் இந்தியர்களுக்கு கிரிக்கெட் விளையாடும் அணியாக தான் தெரிந்து வந்தது. ஏனென்றால் ஆஸ்திரேலியர்கள் விளையாட்டு துறையில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதை நான் சிறுவயது முதல் கேட்டுள்ளேன். 1970-களில் கிரிக்கெட் வர்ணனையாளர்களும் குறிப்பிடுவார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை போல இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருப்பது இல்லை என்று அவர்கள் கூறுவார்கள். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோற்கடிப்பது தான் இந்தியாவின் நீண்ட கால நோக்கமாக இருந்தது. அது கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு 1977-ஆம் ஆண்டு தான் நடந்தது. மேலும் 70 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது. எனினும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் சிறப்பான டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் நடந்தது. 32 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவை பிரிஸ்பேன் மைதானத்தில் தோற்கடித்து இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை மோசமாக வீழ்த்திய ஆஸ்திரேலியாவிற்கு கடைசி போட்டியின் வெற்றி தகுந்த பதிலடியாக அமைந்தது. எனினும் கடந்த சில நாட்களாக இந்த இரு நாடுகளிடையேயான உறவு மிகவும் பின்தங்கியது.
அதற்கு காரணம் முதலில் ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிக்கையில் வெளியான ‘மோடி லீட்ஸ் இந்தியா டூ லாக்டவுன்...’ என்ற கட்டுரை தான். இதை ஆசிய செய்தியாளர் பிலிப் ஷெர்வெல் எழுதியுள்ளார். அவர், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆணவம், இயலாமை மற்றும் அதிக தேசியத்துவம் என்ற பெயரில் கொரோனா வைரஸ் பாதிப்பை சரியாக கட்டுபடுத்தவில்லை. மேலும் அவர்கள் வல்லுநர்கள் கூறிய இரண்டாவது அலை தொடர்பான கருத்துகளுக்கு செவி சாய்க்காமல் கும்பமேளா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
அத்துடன் மோடி மற்றும் அமித் ஷா நடத்திய தேர்தல் பரப்புரையில் பலரும் முககவசம் அணியாமல் பங்கேற்றனர்.மேலும் இந்தியாவின் மெதுவான, திட்டமிடாத தடுப்பூசி கொள்கை மற்றும் சுகாதார துறையின் திறன் அற்ற செயல்பாடுகள் இந்தியாவை கொரோனா வைரஸ் பாதிப்பால் நரகத்திற்கு தள்ளிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டுரை முதலில் ‘டைம்ஸ்’ பத்திரிகையில் வந்தது. பின்னர் இதை ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை அப்படியே வெளியிட்டது. அப்போது ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரி இந்த கட்டுரையை கண்டித்து அதன் ஆசிரியருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.
அதில், “உங்களது பத்திரிகையில் வந்துள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை. மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும் தவறான ஒன்று. இது உலகம் முழுவதும் ஏற்றுகொண்ட இந்தியாவின் கொரோனா நடவடிக்கையை பழிக்கும் நோக்கில் எழுதப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தூதரக அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலுக்கு பிறகு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தியா தொடர்பாக சர்வதேச பத்திரிகையில் எழுதப்பட்டு வரும் கட்டுரைகளை நீங்கள் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதனால் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
இந்தியாவின் ராஜாங்க உறவு சமீப காலங்களாக மாறி வருகிறது என்பதற்கு இந்த செயல் ஒரு சான்று. அந்த பத்திரிகையில் வெளியான கட்டுரையில் உண்மைத்தன்மை சற்று குறைவாக இருந்தாலும், அதற்கு இந்திய தூதரக அதிகாரி எழுதிய பதிலும் உண்மைத்தன்மை மிகவும் குறைவாக தான் உள்ளது. ஏனென்றால் அவர் குறிப்பிட்டது போல் இந்தியாவின் தடுப்பு நடவடிக்கை எந்த ஒரு நாடு பின்பற்றாது, ஏற்கவும் செய்யாது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே ஒரு அறிவிப்பு வெளியிட்டு லாக்டவுன் அறிவித்தது இந்திய அரசு. இந்த மாதிரியான முடிவுகளை எந்த நாடும் அறிவிக்காது. இதனால் ஆஸ்திரேலிய போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் ஆஸ்திரேலியாவில் இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியர்களாக இருந்தால் கூட இந்தியாவிலிருந்து பயணம் செய்து வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் இதை மீறுவோருக்கு 35 லட்சம் அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை அறிவித்துள்ளது. இந்த தடை தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர், “ஆஸ்திரேலியாவில் தற்போது உள்ள கொரோனா பாதிப்புகளில் 57 சதவிகிதம் இந்தியாவிலிருந்து வந்தவர்களால் தான் உள்ளது. இது நமது நாட்டின் சுகாதார துறை மிகவும் நெருக்கடிக்கு தள்ளி உள்ளது. எனவே இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த காலத்தில் பயண தடை என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். இருப்பினும் அதை மீறுவோர்களுக்கு சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை கொடுப்பது இனவாதத்தை வெளிக்காட்டுகிறது. ஏனென்றால் இந்தியாவில் இருந்துவரும் பாதிப் பேருக்கு மேல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியர்களாக உள்ளனர். எனவே அவர்கள் மீது இனவாத தாக்குதலாகவே இந்த தண்டனைகள் பார்க்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் மறுத்துள்ளார். இதற்கு முன்பாக சீனா நாட்டிலிருந்து வருபவர்கள் மீதும் தடை அறிவிக்கப்பட்டிருந்தது எனக் கூறினார். ஆனால் அப்போது சீனாவிலிருந்து வருபவர்களுக்கு தண்டனை எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இதேபோன்ற தடையை அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது ஆஸ்திரேலிய ஒரு போதும் விதிக்காது என்று பலர் கருதுகின்றனர். இந்த தடை மற்றும் அதற்கான தண்டனையை ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையமே விமர்சித்துள்ளது. எனினும் இதில் இனவாதம் எதுவும் இல்லை என்று தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசு மறுத்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் இனவாதம் என்பது புதிது அல்ல. ஏனென்றால் அது அவர்களின் வாழ்க்கையுடன் கலந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கு இருந்த ‘ஒயிட் ஆஸ்திரேலியன்’ கொள்கை டாஸ்மேனியாவை சேர்ந்தவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது. மேலும் அங்கு இந்திய மாணவர்கள் மீது அதிகளவில் இனவெறி தாக்குதல்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக மெல்பேர்ன் பகுதியில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடப்பது வாடிக்கையாக இருந்தது.
ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 2.6 சதவிகிதம் பேர் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். எனவே அங்கு இந்தியர்கள் அதிகமாக உள்ளனர். அங்கு நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல் தொடர்பாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர். அதன்பின்னர் 2009-இல் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த கேவின் ரூட் இந்த சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பின்னர் நிலைமை சற்று சரியானது.
இந்த மாதிரி சம்பவங்களிலிருந்து ஆஸ்திரேலிய இன்னும் திருந்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அங்கு இருக்கும் மக்களுக்கும் பன்முக கலாச்சாரம் தொடர்பாக போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும் அந்நாட்டு மக்கள் பல தரப்பட்ட மக்களின் கருத்துகளை மதிக்க தெரிந்து கொள்ளவேண்டும். இதை ஆஸ்திரேலிய நாடு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்தியா தனது மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் வேகத்தாலும், பல நாடுகளிடமிருந்து வேகமாக விமர்சனங்களை பெற்று வருகிறது. தன்னுடைய சொந்த நாட்டில் இருக்கும் மக்களை காப்பாற்ற முடியாத நிலை இந்தியாவில் இருக்கும் வரை, மற்ற நாட்டில் வாழும் இந்திய வம்சவாளியினருக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது. மேலும் தன்னுடய நாட்டில் வசிக்கும் நபர்களின் உயிர்களுக்கு மரியாதை அளிக்காத அரசுக்கு எப்படி மாற்ற நாடுகள் மரியாதை அளிக்கும். இந்திய அரசு இப்படி நடக்கும் வரை இதுமாதிரியான மூன்றாம் தரமான விமர்சனங்களுக்கு இந்தியா உட்படுத்தப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை " எனத் தெரிவித்துள்ளார்.
கட்டுரையில் இருக்கும் கருத்துகள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களாகும். கட்டுரையின் உட்கருத்துக்களுக்கு ABPநாடு பொறுப்பேற்காது.