பணத்துக்காக 13 ஆண்டுகளாக படுத்தபடுக்கையாக நடிப்பு! ரூ.6 கோடி அபேஸ் செய்த பெண்!
13 ஆண்டுகளில் அவர் பெற்ற ஊதிய பலன் ரூ.6 கோடியாகும். அதனை கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆடம்பர விடுமுறைக்கு சென்ற தனது மகள் மற்றும் மருமகனுக்கு செலவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் ரூ.6 கோடி மதிப்பிலான ஊதிய பலன்களை பெற பெண் ஒருவர் செய்த செயல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களை காப்பதில் அனைத்து நாட்டின் அரசும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதீத அக்கறை செலுத்தி வருவதை நாம் பார்த்து வருகிறோம். வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல அம்சங்களை பின்பற்றி வருகின்றனர்.
இத்தகைய விஷயங்களில் முறைகேடாக சிலர் பயன்பெற்று கையும் களவுமாக சிக்குவதை நாம் அவ்வப்போது பார்த்திருப்போம். அந்த வகையில் இங்கிலாந்தில் பெண் ஒருவர் வசமாக சிக்கியுள்ளார். ஃபிரான்சஸ் நோபல் என்ற 66 வயது பெண் ஒருவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பல ஆண்டுகளாக பலனளிக்கும் ஊதியம் தேவைப்படுவதாகவும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் கவுண்டி கவுன்சிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் 24 மணிநேரமும் தீவிர வீட்டு பராமரிப்பு தேவைப்படுவதாகவும் அதற்கு பல ஆண்டுகளாக பலனளிக்கும் ஊதியம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்ற கவுன்சிலின் உறுப்பினர்கள் ஃபிரான்சஸ் நோபலுக்கு மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 'நேரடி கட்டண பராமரிப்பு தொகுப்பு' முறையை செயல்படுத்தினர்.
இதன்மூலம் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை கிட்டதட்ட 13 ஆண்டுகளாக அவர் பெற்று வந்தார். இதனிடையே நோபல் தனது நாயை அதிகாலையில் அழைத்துச் செல்வதை அக்கம்பக்கத்தினர் பார்த்து சந்தேகமடைந்துள்ளனர். பின்னர் தீவிரமாக கண்காணித்ததில் ஹோம் டெலிவரி பொருட்களை எந்த பிரச்சனையுமின்றி வாங்கிச் செல்வதையும் பார்த்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் கவுண்டி கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் நோபலுக்கு நீதிமன்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் அவர் பெற்ற ஊதிய பலன் ரூ.6 கோடியாகும். அதனை கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆடம்பர விடுமுறைக்கு சென்ற தனது மகள் மற்றும் மருமகனுக்கு செலவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜராகி மோசடி செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நோபலுக்கு நான்கு ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது இங்கிலாந்தில் நடந்த மிகப்பெரிய மோசடி வழக்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்