Israel Hamas War: மேலும் 12 பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்.. போர் நிறுத்தம் கைகொடுக்குமா?
5 வது நாளாக போர் நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் 10 இஸ்ரேலியர்கள் மற்றும் 2 வெளிநாட்டு பிரஜைகள் என 12 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே சுமார் 7 வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் காசாவில் சுமார் 12,000 த்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்தனர்.
மேலும் ஹமாஸ் அமைப்பினர் 240 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை பணயக்கைதிகளாக அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் 4 நாட்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த 4 நாட்களில் ஹமாஸ் தரப்பில் பணயக்கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க ஒப்புதல் அளித்தது. அதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அந்த வகையில் 3 நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் 40 பணயக்கைதிகளையும், இஸ்ரேல் 120 சிறை கைதிகளையும் விடுதலை செய்தனர். இதனிடையே 4 நாள் போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது, இரு தரப்பினரும் எந்த விதிமீறலும் இல்லாமல் முறையாக கடைபிடித்தனர். மேலும் பணய கைதிகள் மற்றும் பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுவிப்பு சுமூகமாக நடைபெற்றதாலும் போர் நிறுத்தம் மேலும் நீடிக்க உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தது. அதன் பேரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பேரில் இரண்டு நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு நாளில் கூடுதலாக பணயக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவிக்க இரு தரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர். 4 நாள் போர் நிறுத்தத்தில் ஹமாஸ் மொத்தமாக 51 பணய கைதிகளையும், இஸ்ரேல் 153 பாலஸ்தீன கைதிகளையும் விடுதலை செய்தது.
கத்தார் அரசு அமெரிக்கா மற்றும் எகிப்தின் ஆதரவுடன் காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இடைநிறுத்தம் தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி பேசுகையில், "காஸா பகுதியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மனிதாபிமான போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
5 வது நாளாக போர் நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் 10 இஸ்ரேலியர்கள் மற்றும் 2 வெளிநாட்டு பிரஜைகள் என 12 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளனர். இதனை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது. இன்னும் சில பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Today (Nov. 28), 4 containers carrying diesel and 4 containers carrying cooking gas were sent from Egypt to the UN’s humanitarian aid orgs in Gaza through the Rafah crossing.
— COGAT (@cogatonline) November 28, 2023
The fuel and cooking gas are designated for the operation of vital humanitarian infrastructure Gaza. pic.twitter.com/szhSmBzua3
மேலும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லாரி மூலம் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.