படுத்தியெடுக்கும் H3N2 வைரஸ்...செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? உலக சுகாதார அமைப்பு சொல்வதை கேளுங்கள்..!
ஆக்ஸிஜன் செறிவு நிலை 90 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், தீவிர சிகிச்சை தேவைப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுயமாக மருந்துகளை உட்கொள்ள கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, வைரஸ் என சொன்னாலே அனைவரும் அலறி அடித்து கொண்டு ஓடுவது போன்ற சூழலை உருவாக்கியது கொரோனா. இதன் தாக்கம் கிட்டதட்ட மூன்று ஆண்டுகள், உலக நாடுளை உலக்கியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, H3N2 வைரஸ் பெரும் அச்சத்தை கிளப்பி வருகிறது.
இன்ஃப்ளூயன்ஸா (குளிர்காய்ச்சல்) ஏ வைரஸின் துணை வகையான H3N2, இந்தியாவின் இரண்டு உயிர் பலிகளை வாங்கியுள்ளது. ஹரியானாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் கர்நாடகாவில் உயிரிழந்துள்ளார். இந்த வைரஸினால் ஏற்பட்ட காய்ச்சலால் நாடு முழுவதும் 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு கூட, பல்வேறு வகையான குளிர்காய்ச்சல் பரவுவதற்கு இந்த வகை வைரஸ் காரணமாக இருந்திருக்கிறது. பொதுவாக, வானிலை கடும் குளிரில் இருந்து வெப்பமான சூழலுக்கு மாறும்போது இம்மாதிரியான காய்ச்சல் ஏற்படும்.
H3N2 வைரஸ் என்றால் என்ன?
இது ஒரு இன்ஃப்ளூயன்ஸா (குளிர்காய்ச்சலை ஏற்படுத்தும்) வைரஸ். இது சுவாச நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் பறவைகள் மற்றும் பாலூட்டிகளையும் பாதிக்கலாம். பறவைகள் மற்றும் பிற விலங்குகளில், H3N2 உருமாறிய வைரசாக மாறும் தன்மை கொண்டுள்ளது. அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, மனிதர்களிடையே ஏற்படும் குளிர்காய்ச்சலுக்கு முக்கிய காரணி H3N2 வைரஸ்.
H3N2 வைரஸின் அறிகுறிகள் என்ன?
பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் என பிற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பறவும் நோய்த்தொற்றால் ஏற்படும் லேசான சுவாச தொற்று (காய்ச்சல் மற்றும் இருமல்) முதல் கடுமையான நுரையீரல் நோய் வரை, கடுமையான சுவாசக் கோளாறு தொடங்கி மரணம் வரை கூட இந்த H3N2 வைரஸ் இட்டு செல்லும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குளிர்
இருமல்
காய்ச்சல்
குமட்டல்
வாந்தி
தொண்டை வலி
தசைகள் மற்றும் உடலில் வலி
சில சந்தர்ப்பங்களில், வயிற்றுப்போக்கு, தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல்
சுவாசிப்பதில் சிரமம், மார்பில் வலி அல்லது அசௌகரியம், தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை யாரெனும் அனுபவித்தால், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
இந்த வைரஸ் சுவாசக் குழாயைத் தாக்குவதால், கீழே குறிப்பிட்டவற்றை மேற்கொள்வது அவசியம்:
பல்ஸ் ஆக்சிமீட்டரின் உதவியுடன் ஆக்ஸிஜனின் அளவை தொடர்ந்து சரிபார்க்கவும். ஆக்ஸிஜன் செறிவூட்டல் அளவு 95 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், மருத்துவரை அணுகுவது கட்டாயமாகும்.
ஆக்ஸிஜன் செறிவு நிலை 90 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், தீவிர சிகிச்சை தேவைப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுயமாக மருந்துகளை உட்கொள்ள கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிகிச்சை என்ன?
சரியான ஓய்வு எடுப்பது, நிறைய திரவங்களை குடிப்பது மற்றும் காய்ச்சலைக் குறைக்க அசெட்டமினோஃபென் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணி மருந்துகளை உபயோகிப்பது H3N2 இன்ஃப்ளூயன்ஸா சிகிச்சை முறையின் ஒரு பகுதியாகும். ஒரு நோயாளிக்கு கடுமையான அறிகுறிகள் இருந்தால் அல்லது சிக்கல்கள் இருந்தால், மருத்துவர் ஒசெல்டமிவிர் மற்றும் ஜானமிவிர் போன்ற வைரஸ் எதிர்ப்பு மருந்துகளையும் பரிந்துரைக்கலாம்.
வைரஸ் பாதிப்பு இருப்பது சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டாலோ, சிகிச்சைப் பலன்களை அதிகரிக்க நியூராமினிடேஸை கூடிய விரைவில் (அறிகுறி தோன்றிய 48 மணி நேரத்திற்குள்) பரிந்துரைக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.