டிரம்ப்க்கு கால் செய்த சுந்தர் பிச்சை.. ஆனா, போன் எடுத்தது யார் தெரியுமா?
டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவிக்க கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை, அவருக்கு கால் செய்துள்ளார். இருவரும் தொலைப்பேசியில் பேசும்போது, எலான் மஸ்க்கும் இந்த காலில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவிக்க கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, அவருக்கு கால் செய்துள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க்கும் இந்த காலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப்க்கு கால் செய்த சுந்தர் பிச்சை:
அமெரிக்க அதிபராக உள்ள டிரம்பிடம் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார் எலான் மஸ்க். அவர் போகும் நிகழ்ச்சிகள் தொடங்கி குடும்ப நிகழ்ச்சிகள் வரை எலான் மஸ்க் இல்லாமல் நடைபெறுவது இல்லை. இப்படியிருக்க, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்க்கு வாழ்த்து தெரிவிக்க கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கால் செய்துள்ளார்.
இருவரும் தொலைப்பேசியில் பேசும்போது, எலான் மஸ்க்கும் இந்த காலில் இருந்ததாக The information செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பிலிருந்தே டொனால்ட் டிரம்ப் உடன் இணைந்து இணக்கமாக செயல்பட்டவர் எலான் மஸ்க்.
அதிபர் தேர்தலின்போது டிரம்ப்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது மட்டும் இன்றி அவருக்காக பல்வேறு மாகாணங்களில் பிரச்சாரம் செய்தார். அதிபர் தேர்தல் வெற்றி உரையிலேயே மஸ்க் குறித்து குறிப்பிட்டிருந்த டிரம்ப், "நமக்கு ஒரு புதிய நட்சத்திரம் கிடைத்துள்ளது. நட்சத்திரம் பிறந்துள்ளது. அது வேறு யாரும் அல்ல. எலான் (மஸ்க்) தான்.
அமெரிக்க அரசாங்கத்தில் தவிர்க்க முடியாத நபரா மஸ்க்?
அவர் ஒரு அற்புதமான நபர். இன்று இரவு ஒன்றாக அமர்ந்திருந்தோம். உங்களுக்குத் தெரியும். அவர் பிலடெல்பியாவில் இரண்டு வாரங்கள், பென்சில்வேனியாவின் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். எலானால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதனால்தான், உங்களை நேசிக்கிறேன் எலான். நமது நாடு இதுவரை கண்டிராத அரசியல் வெற்றி இது" என்றார்.
பின்னர், அமெரிக்க அரசாங்கத்தில் செயல்திறனை கவனிக்க என தனித்துறை ஒன்றை உருவாக்கி, அதன் தலைவர் பதவிக்கு எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகிய இருவரையும் தலைவராக நியமித்தார் டிரம்ப்.
இதன் மூலம், பட்ஜெட் தாக்கல் தொடங்கி பல முக்கிய முடிவுகளில் நேரடியாக எலான் மஸ்க் பங்கேற்பார். அதே நேரம் பெயரில் அரசாங்கம் என இருந்தாலும் Department of Government Efficiency அரசாங்கதுறை அல்ல. அரசாங்கத்திற்கு வெளியில் இருந்தே ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் துறைமட்டுமே.