`509 பீரங்கிகள், 123 ஹெலிகாப்டர்கள்’ - ரஷ்யாவின் இழப்பு பட்டியலை வாசித்த உக்ரைன் படைத்தளபதி!
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் படைத்தளபதியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ரஷ்யப் படையினரின் இழப்புகளின் கணக்கீட்டைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் நாட்டின் படைத்தளபதியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ரஷ்யப் படையினரின் இழப்புகளின் கணக்கீட்டைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், `ஆக்கிரமிப்பாளரை வெல்லுங்கள்!’ என்ற முழக்கமும் அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளது.
உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடான உக்ரைன், ரஷ்யாவுடன் கிழக்கேயும், வட-கிழக்கேயும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உக்ரைன் நாட்டின் நடுவில் பாயும் தினேப்பர் ஆறு, உக்ரைனை மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்கு உக்ரைன் எனப் பிரிக்கிறது. 4.5 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாடு இது.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. 27 நாட்களாக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்திவர அதை தாக்குப்பிடித்து தலைநகர் கீவை கைக்குள் வைத்துள்ளது உக்ரைன்.
ஆனால், உக்ரைன் இதற்காக மிகப்பெரிய விலையைக் கொடுத்து வருகிறது. அதே போல் ரஷ்யாவும் உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டு வருகிறது. பொருளாதாரத் தடைகள், வான்வழிப் பரப்பை பயன்படுத்த தடை, எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் என ரஷ்யா அடுக்கடுக்கான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் படைத்தளபதியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ரஷ்யப் படையினரின் 509 பீரங்கிகள், 1556 பாதுகாப்புப் படை வீரர்களின் கேரியர் வாகனங்கள், 252 பீரங்கி வாகனங்கள், 80 MLRS, 45 விமான அழிப்புத் தொழில்நுட்ப வாகனங்கள், 99 விமானங்கள், 123 ஹெலிகாப்டர்கள், 1,000 வாகனங்கள், 3 கப்பல்கள்/படகுகள், 70 எரிபொருள் டேங்க்குகள், 35 ஆளில்லா தாக்குதல் விமானங்கள், 15 சிறப்பு உபகரணங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
🇺🇦 Загальні бойові втрати противника з 24.02 по 22.03 орієнтовно склали / 🇬🇧 The total combat losses of the enemy from...
Posted by Генеральний штаб ЗСУ / General Staff of the Armed Forces of Ukraine on Tuesday, 22 March 2022
இந்தத் தரவுகளின் எண்ணிக்கை மேலும் பெருகி வருவதாகவும், போரின் தீவிரத்தால் கணக்கிடுவது சிரமமாக இருப்பதாகவும் இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தப் பதிவில், `ஆக்கிரமிப்பாளரை வெல்லுங்கள்! ஒன்றுபட்டால் நாம் வெல்வோம்! ஆக்கிரமிப்பாளரைத் தாக்கு! ஒன்று சேர்ந்து வெல்வோம்!’ என்று உக்ரைன் நாட்டு மொழியில் எழுதப்பட்டுள்ளது.